கோவையில் நடந்த அத்திக்கடவு அவினாசி திட்ட பாராட்டு விழாவை முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் புறக்கணித்தார். அத்துடன் விழா அழைப்பிதழில் எம்.ஜி.ஆர், ஜெயலலிதா படங்கள் இல்லாததால் விழாவை புறக்கணித்ததாக கூறி இருந்தார்.
ஜெயலலிதா மறைவுக்கு பிறகு முதன் முறையாக அவர் அதிமுக உள்கட்சி விவகாரம் தொடர்பாக குரல் கொடுத்தது அதிமுகவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில் கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள குள்ளம்பாளையத்தில் உள்ள செங்கோட்டையன் வீட்டுக்கு நேற்று முதல் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
இன்று காலை ஐகோர்ட் தீர்ப்பு வெளியான நிலையில், அது எடப்பாடி பழனிசாமிக்கு பெரும் பின்னடைவாக கருதப்படுகிறது. இந்த நிலையில் இன்று காலை செங்கோட்டையன் வீட்டில் ஈரோடு மாவட்ட அதிமுக நிர்வாகிகள் பெருமளவில் திரண்டு உள்ளனர்.
அவர்களுடன் செங்கோட்டையன் ஆலோசனை நடத்த இருப்பதாக கூறப்படுகிறது. இந்தகூட்டத்தில் அதிமுகவுக்கு ஏற்பட்டுள்ள இக்கட்டான நிலையில் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து முக்கிய ஆலோசனை நடத்த இருக்கிறார்.
சிறிது நேரம் கழித்து வீட்டை விட்டு வெளியே வந்த செங்கோட்டையன், எந்த ஆலோசனையும் நடைபெறவில்லை. அந்தியூரில் நடைபெறும், பொதுக்கூட்டத்திற்கு அழைப்பிதழ் கொடுக்க அதிமுக நிர்வாகிகள் வந்துள்ளனர். என் வீட்டுக்கு எப்போதும் இப்படி கட்சி நிர்வாகிகள் வந்து செல்வது வாடிக்கை தான். நீங்கள் பாட்டுக்கு ஆலோசனை நடத்துகிறார் என போட்டு உள்ளீர்கள். எந்த ஆலோசனையும் நடைபெறவில்லை என்று அவர்கள் பத்திரிகையாளர்களிடம் கூறினார்.