உலக கோப்பை கிரிக்கெட் போட்டியின் முதல் அரையிறுதிப்போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் இன்று மதியம் 2 மணிக்கு தொடங்குகிறது. இந்த முதலாவது அரையிறுதி ஆட்டத்தில் இந்திய அணியும், நியூசிலாந்து அணியும் மோத உள்ளன
இந்த தொடரில் லீக் சுற்று ஆட்டங்கள் முடிவில் இந்தியா, தென் ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளன. இன்று மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெறும் முதலாவது அரையிறுதி ஆட்டத்தில் புள்ளிப்பட்டியலில் முதல் இடம் பிடித்த இந்திய அணியும், 4வது இடம் பிடித்த நியூசிலாந்து அணியும் மோத உள்ளன.
லீக் சுற்றில் தோல்வியே சந்திக்காத இந்திய அணி நாளை நடைபெறும் அரையிறுதி ஆட்டத்தில் நியூசிலாந்தை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறும் முனைப்பில் உள்ளது. அதேபோல் லீக் சுற்றில் இந்தியாவிடம் தோல்வி கண்ட நியூசிலாந்து அணி இந்திய அணியை வீழ்த்தி தொடர்ந்து 3வது முறையாக இறுதிப்போட்டிக்கு முன்னேறும் முனைப்பில் உள்ளது.
கடந்த 2019ம் ஆண்டு நடைபெற்ற உலகக்கோப்பை அரையிறுதி ஆட்டத்தில் நியூசிலாந்திடம் தோல்வி கண்டு வெளியேறிய இந்திய அணி இந்த முறை அதற்கு பழிதீர்க்கும் முனைப்புடன் உள்ளது. இதனால் இன்றைய ஆட்டத்தில் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது.
இன்றைய போட்டியில் இந்திய அணியில் அஸ்வினுக்கு வாய்ப்பு வழங்கப்படலாம் என கூறப்படுகிறது. நியூசிலாந்து அணியில் இடது கை ஆட்டக்காரர்கள் அதிகம் இருப்பதாலும், கடைசி லீக்கில் நெதர்லாந்துடன் மோதிய போது இந்திய வேகப்பந்து வீச்சாளர் சிராஜ் கழுத்தில் பந்து விழுந்து காயம் ஏற்பட்டதாலும், வான்கடே மைதானம் பல போட்டிகளை சந்தித்ததால் இன்று சுழற்பந்து வீச்சுக்கு சாதகமாக இருக்கும் என்பதாலும், அஸ்வினுக்கு வாய்ப்பு வழங்கப்படலாம் என கூறப்படுகிறது.
சூர்யகுமார் யாதவை நீக்கிவிட்டு அவருக்கு பதிலாக அஸ்வினுக்கு வாய்ப்பு வழங்கப்படலாம் . இன்றைய போட்டியில் இந்தியா 6 பந்து வீச்சாளர்களுடன் களமிறங்க திட்டமிட்டுள்ளது. கடந்த அக்டோபர் 8ம் தேதி நடைபெற்ற ஆஸ்திரேலியாவிற்கு எதிரான முதல் போட்டியில் அஸ்வினுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது. இதில் 10 ஓவர் வீசிய அஸ்வின்( 1 மெய்டன்) 34 ரன்கள் கொடுத்து ஒரு விக்கெட் எடுத்தது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில், அரைஇறுதி போட்டி குறித்து இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் ரோகித் சர்மா கூறுகையில், “நியூசிலாந்து அணியின் பலம் மற்றும் பலவீனத்தை நன்கு அறிந்திருப்பதால் வான்கடே மைதானத்தில், டாஸ் வெற்றி, தோல்வி ஆட்டத்தில் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது. கடந்த உலக கோப்பை அரையிறுதியில் நிகழ்ந்தது நினைவில் இருந்தாலும், அதைப் பற்றி பெரிதாக யாரும் பேசிக்கொள்ளவில்லை. எப்படி சிறப்பாகவிளையாடுவது, எப்படி ஆட்டத்தை மெருகேற்றுவது என்பதில்தான் எங்கள் கவனம் உள்ளது” என்று கூறினார்.
நியூசிலாந்து கேப்டன் கேன் வில்லியம்சன், அரையிறுதிப்போட்டி குறித்து கூறியதாவது:
இந்திய அணியினர் அற்புதமாக விளையாடிக் கொண்டிருக்கிறார்கள். அவர்களை சொந்த மண்ணில் வீழ்த்துவது உண்மையிலேயே மிகப்பெரிய சவால் என்பதை அறிவோம்.ஆனால் லீக் சுற்று இப்போது முடிந்து விட்டது. தொடரின் இறுதிக்கட்டத்தை எட்டும் போது எல்லாவற்றையும் முதலில் இருந்து தான் தொடங்கியாக வேண்டும்.
எங்களை குறைவாக நீங்கள் மதிப்பிட்டால் அதனால் எங்களுக்கு ஒன்றும் பிரச்சினையில்லை. இது எங்களுக்கு பழக்கமாகி விட்டது. களத்தில் முழு திறமையை வெளிப்படுத்தும் போது அது எங்களுக்கு வெற்றிக்குரிய வாய்ப்பை உருவாக்கி தரும். இந்த தொடரில் மற்ற அணிகளை விட இந்திய அணியே இதுவரை சிறப்பாக செயல்பட்டுள்ளது. அதே சமயம் நாங்களும் ஓரளவு நன்றாக ஆடியுள்ளோம்.
அரையிறுதி ஆட்டத்தில் இந்திய அணிக்கு ஆதரவாக மைதானம் முழுவதும் ரசிகர்கள் நீலநிற உடையில் காட்சி அளிப்பார்கள் என்று எதிர்பார்க்கிறோம். அதே நேரத்தில், ஒருவீரராக இந்த மாதிரி மிகப்பெரிய ரசிகர் பட்டாளம் முன் விளையாடுவது ஒரு வகையில் சிறப்பு வாய்ந்தது தான். எங்கள் நாடு சிறியது. மைதானத்தைரசிகர் கூட்டத்தால் நிரப்ப முடியாது. எனவே இப்படியொரு சூழலில் உற்சாகமாக அனுபவித்து விளையாட விரும்புகிறேன். இந்திய மண்ணில்,இந்தியாவுக்கு எதிராக உலகக்கோப்பை அரையிறுதியில் ஆடும் வாய்ப்பு அனைவருக்கும் கிடைத்து விடாது. இந்த வாய்ப்பை ஆவலுடன் எதிர்நோக்கி உள்ளேன்.
இன்றைய அரையிறுதிப்போட்டி மழை காரணமாக தடைபட்டால் ஓவர்கள் குறைக்கப்படும். அதுவும் நடத்த முடியாவிட்டால் லீக்கில் அதிக புள்ளி பெற்ற அணி என்ற அடிப்படையில் இந்திய அணி வெற்றி பெற்றதாக அறிவிக்கவும் வாய்ப்பு உண்டு.
இன்றைய போட்டியை காண சூப்பர் ஸ்டார் ரஜினி மும்பை சென்று உள்ளார்.