ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் இமானுவேல் சேகரன் நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்திய காங்கிரஸ் மாநிலத் தலைவர் செல்வப்பெருந்தகை செய்தியாளர்களிடம் கூறியது.. இன்று இமானுவேல் சேகரனுக்கு அஞ்சலி செலுத்த வந்த தலைவர்களுக்கு ராமநாதபுரம் மாவட்ட காவல் துறை உரிய பாதுகாப்பு வழங்கவில்லை. மதுரை மற்றும் சிவகங்கை மாவட்ட காவல் துறையினர் முறையாக பாதுகாப்போடு அழைத்து வந்த நிலையில், ராமநாதபுரம் மாவட்ட போலீஸார் மிகுந்த அலட்சியப் போக்கில் எந்த விதமான பாதுகாப்பும் வழங்காமல் நடந்து கொண்டது வருத்தம் அளிக்கிறது. அஞ்சலி செலுத்துவதற்கு தாங்கள் கட்டுப்பாட்டோடு வந்ததால் எந்தவித அசம்பாவிதம் ஏற்படவில்லை. மாவட்ட காவல் கண்காணிப்பாளர், காங்கிரஸ் கட்சியின் தலைவர்கள் வரும் பொழுது ஏன் பாதுகாப்பு அளிக்கவில்லை என தெரியவில்லை. மேலும், அஞ்சலி செலுத்த வந்த தலைவர்களை ஆங்காங்கே நிறுத்தி வைத்ததும் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது” என்று செல்வப்பெருந்தகை கூறினார். இதனையடுத்து, செல்வப்பெருந்தகை அஞ்சலி செலுத்திவிட்டுச் செல்லும்போது, ரயில்வே கேட் அருகே காங்கிரஸ் தொண்டர்கள் சாலையில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர். அப்போது, தர்ணாவை கைவிடுமாறு சொல்லி அவர்களை தர்ணாவில் இருந்து எழவைத்தார் செல்வப்பெருந்தகை. போலீஸாரும் தர்ணாவில் ஈடுபட்டவர்களை சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர்.