கரூர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி செயல்வீரர்கள் கூட்டம் கரூரில் நேற்று நடைபெற்றது. இதில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வபெருந்தகை கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார்.
முன்னதாக அவர் செய்தியாளர்களை சந்தித்து பேசியதாவது:
இந்தியாவில் கடந்த 10 ஆண்டுகளாக அறிவிக்கப்படாத அவசரகால சட்டங்கள் முளைத்து கொண்டு இருக்கின்றன. யாராவது தங்களது கருத்துகளை கூறினால் அவர்கள் மீது தாக்குதல் என பாசிச ஆட்சி நடந்து வருகிறது. முழுமையான மோடி ஆட்சி என்பது போய், கூட்டணி ஆட்சி என மக்கள் தீர்ப்பளித்து இருக்கிறார்கள்.
ராகுல்காந்தி தொடர்ந்து தனது ஜனநாயக கடமையை நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சி தலைவராக ஆற்றி வருகிறார். அவர் கேட்கும் கேள்விகளுக்கு பதில் சொல்ல முடியாமல் திணறுகிறார்கள். அவர் மக்களின் முகமாக தேசத்தில் விளங்கி கொண்டிருக்கிறார்.
வெறுப்பு அரசியலை தொடர்ந்து பாஜக அரசு செய்து வருகிறது. தமிழகத்திலும் பாஜக வெறுப்பு அரசியல் செய்து வருகிறார்கள்.
இங்கிலாந்தில் லேபர் பார்ட்டி ஆட்சியை இழந்து 15 ஆண்டுகள் ஆகின்றன. இப்போது லேபர் பார்ட்டி விஸ்வரூபம் எடுத்து 400 இடங்களுக்கு மேல் வெற்றிபெற்று இருக்கிறது. 2029-ல் அதுபோன்ற ஒரு முடிவு இந்தியாவில் வரும். ஆட்சி மாற்றம் வரும். காங்கிரஸ் பேரியக்கத்தின் தாரக மந்திரம் காமராஜர் ஆட்சிதான். அதற்கான முன் முயற்சிகளை எடுத்து வருகிறோம்.
மின்கட்டண உயர்வுக்கு காரணம் உதய்மின் திட்டத்தில் கையெழுத்திட்டது. மின்சார வாரியம் தமிழ்நாட்டின் கட்டுப்பாட்டில் இருக்கிறதா என ஆய்வு செய்து பார்க்க வேண்டும். கடன் பெறுவதற்கு கூட மத்திய அரசின் அனுமதி பெற வேண்டும்.
உதய்மின் திட்டத்தில் ஜெயலலிதா சேராமல், கையெழுத்து போடாமல் இருந்தார். இத்திட்டத்தில் கையெழுத்திட்டால் எங்களது உரிமைகள் பறிபோகும், நாங்கள் தீர்மானிக்க முடியாது என 2016 வரை தெளிவாக இருந்தார். 2017-ம் ஆண்டு யார் கையெழுத்திட்டது என தெரியும். இந்த சுமையை மக்கள் மீது சுமத்த கூடாது. இதனை திரும்ப பெற வேண்டும் என காங்கிரஸ் தொடர்ந்து வலியுறுத்துகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.