அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ. அதிமுகவின் அமைப்பு செயலாளராகவும் எம்.எல்.ஏவாகவும் இருக்கிறார். இவர் நேற்று தனது சமூக வலைதளத்தில் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தியை புகழ்ந்து ஒரு பதிவு வெளியிட்டிருந்தார். நேற்று ராஜீவ் காந்தி நினைவுதினத்தையொட்டி இந்த பதிவினை செல்லூர் ராஜூ வெளியிட்டு இருந்தார்.
தேர்தல் பிரசாரத்திற்காக மும்பை வந்த ராகுல் அங்குள்ள ஒரு ஓட்டலில் அமர்ந்து மற்றவர்களுடன் சேர்ந்து உணவருந்துகிறார். அப்போது அவரை கல்லூரி மாணவிகள் சந்தித்து பேசினர். அவர்களின் கேள்விகளுக்கு பதிலளித்தவாறே ராகுல் உணவருந்துகிறார். இந்த வீடியோவை வெளியிட் செல்லூர் ராஜூ, ‘நான் பார்த்து ரசித்து நெகிழ்ந்த இளம் தலைவர் ராகுல் ‘ என அதில் குறிப்பிட்டு இருந்தார்.
இந்த வீடியோ வெளியானதும் அதிமுக மேலிடத்தில் அதிர்ச்சி ஏற்பட்டது. தேர்தல் முடிவுக்கு பிறகு அதிமுகவில் பூகம்பம் கிளம்பும் என பேசப்பட்டு வந்த நிலையில் ரிசல்ட்டுக்கு முன்னரே சுனாமி கிளம்பி விட்டது என நையாண்டியாக சிலர் பதிவிட்டிருந்தனர். இது குறித்து செல்லூர் ராஜூவிடமே பத்திரிகையாளர்கள் கேட்டனர். அதற்கு அவர் கூறியதாவது: ராகுலின் எளிமைக்காகவே இந்த பதிவை வெளியிட்டேன். முன்னாள் பிரதமரின் மகனான இருந்த போதிலும் அவர் மக்களுடன் அமர்ந்து சாப்பிட்டதை பார்த்து இதை வெளி்யிட்டேன். வேறு காரணம் எதுவும் இல்லை. நானாகத்தான் இதை வெளியிட்டேன்.
அதிமுகவில் இருந்து விலக திட்டமாக என்று கோணத்தில் கேட்கிறீர்கள். நாங்கள் தான் அதிமுக, அதிமுகவை நாங்க தான் உருவாக்கிநோம். எனவே அதிமுகவில் தான் இருப்பேன். இதை வெளியிட்டதற்கு எந்த நோக்கமும் இல்லை என்றார். இதற்கு காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூர், செல்லூர் ராஜூக்கு பாராட்டும் நன்றியும் தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில் இன்று அந்த வீடியோ நீக்கப்பட்டிருந்தது. இது குறித்து அதிமுக வட்டாரத்தில் விசாரித்தபோது, செல்லூர் ராஜூவை நேற்று இரவு அதிமுக தலைமை தொடர்பு கொண்டு இதுபற்றி விளக்கம் கேட்டதாம். அம்மா பொதுச்செயலாளராக இருந்தபோது இப்படி வெளியிட முடியுமா? அதிமுக குறித்து சமூக வலைதளங்களில் பல கருத்துகள் வந்து கொண்டிருக்கும் நிலையில் இந்த பதிவு தேவையா- என கேட்கப்பட்டதாம். அதைத்தொடர்ந்தே செல்லூர் ராஜூ அந்த பதிவை நீக்கி விட்டதாக கூறப்படுகிறது.