தமிழக பாஜ தலைவர் அண்ணாமலையின் நடவடிக்கை பிடிக்காமல், அந்த கட்சியில் இருந்து அடுத்தடுத்து பல நிர்வாகிகள், கட்சி தாவி அதிமுகவில் சேர்ந்து வருகிறார்கள். இதனால் அதிமுக, பாஜ இடையே வார்த்தை போர் தொடங்கி உள்ளது. இந்த நிலையில் சென்னை ராயப்பேட்டை அதிமுக தலைமை அலுவலகத்தில் அதிமுக நிர்வாகிகள் கூட்டம் இன்று நடந்தது. இந்த கூட்டத்துக்கு வந்த முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ நிருபர்களிடம் கூறியதாவது:
மத்தியில் ஆளுகிறோம் என்ற திமிரில் பாஜகவினர் பேசக்கூடாது. அதிமுகவினர் பாஜகவில் இணைந்தபோது இனித்தது, இப்போது பாஜகவினர் அதிமுகவில் இணைந்தது கசக்கிறதா? மோடியா, லேடியா என கேட்டு வென்று காட்டியவர் ஜெயலலிதா, அவருக்கு நிகரான தலைவர் எவனும் இல்லை. அண்ணாமலை நான் ஜெயலலிதா போல தலைவர் என்கிறார். ஊர்க்குருவி எவ்வளவுதான் உயர பறந்தாலும் பருந்தாக முடியாது.பாஜகவினர் வாய்க்கொழுப்போடு பேசுகிறார்கள். அதை அவர்கள் நிறுத்திக்கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.