அரசியலில் பரபரப்புக்கும், தமாசுக்கும் பெயர் பெற்றவர் முன்னாள் அதிமுக அமைச்சர் செல்லூர் ராஜூ. தற்போது எம்.எல்.ஏவாகவும் இருக்கிறார். இவர் சட்டமன்றத்தில் பேசும்போதும், தானாகவே சிரிப்பலை வந்துவிடும். கிளாம்பாக்கம் புதிய பஸ் நிலையம் பற்றி பேசிய அவர் கேளம்பாக்கம் என்ற பேசி கலகலப்பு ஏற்படுத்தினார்.
திடீரென அண்ணாமலைக்கு சவால் விடுவார். அப்போது எங்கிருந்து தான் ஆவேசம் வருமோ? ஆவேசத்தை கொப்பளித்து விடுவார். இப்படி அரசியலில் எப்போதும் இவர் தனித்தன்மையுடன் இருப்பவர். தேர்தல் முடிந்த பின்னர், அரசியல்வாதிகள் பற்றிய எந்த தகவலும் பெரிதாக வெளிவரவில்லை.
இந்த நிலையில் இன்று செல்லூர் ராஜு வழக்கமான தனது பாணியில் புதிய சர்ச்சை ஒன்றை கிளப்பி இருக்கிறார். அவர் தனது எக்ஸ் பதிவில், காங்கிரஸ் இளம் தலைவர் ராகுல்காந்தி எம்.பி.யை புகழ்ந்து தள்ளி இருக்கிறார். அதில் டில்லியில் தேர்தல் பிரசாரத்தின்போது ராகுல் ஓட்டலில் அமர்ந்து சாப்பிட்டபடியே மாணவிகளுடன் உரையாடுகிறார். அந்த வீடியோவை செல்லூர் ராஜூ வெளியிட்டு இருக்கிறார். அதில் நான் பார்த்து ரசித்து நெகிழ்ந்த இளம் தலைவர் ராகுல் என பதிவிட்டு உள்ளார்.
இந்த பதிவை இன்று ஏன் அவர் வெளியிட்டார் என்பது தான் புரியாத புதிராக இருக்கிறது. திமுக கூட்டணியில் உள்ள ஒரு தலைவரை ஏன் அவர் புகழ்ந்து தள்ளினார் என்று அதிமுக தலைவர்கள் தலையை பிய்த்துக்கொள்கிறார்கள். இன்று ராகுலின் தந்தை முன்னாள் பிரதமர் மறைந்த ராஜீவ் காந்தியின் நினைவு தினம். ராஜீவ்காந்தியை பற்றி ஏதாவது பதிவு வெளியிடலாம் என கருதி, ராகுலைப்பற்றி பதிவிட்டு இருக்கலாம் என அதிமுகவினர் சிலர் கருத்து தெரிவித்துள்ளனர். எப்படியோ அதிமுக மேலிடத்துக்கு தலைவலியை ஏற்படுத்தி இருக்கிறார் செல்லூர் ராஜூ.