பாரத சாரணர் சாரணியர் இயக்கம் தமிழ்நாடு அமைப்பின் தலைவரும், பள்ளிக் கல்வித் துறை அமைச்சருமான அன்பில் மகேஷ் உத்தரவின் பேரில், கரூர் மாவட்டம், வெண்ணமலையில் உள்ள தனியார் பள்ளி (பரணி பார்க் பள்ளி) மாணவர்களுக்கு மாநில அளவில் வழங்கப்படும் மிக உயர்ந்த விருதான “ராஜ்ய புரஸ்கார்” மாநில விருது பெறுவதற்கான மாநில விருது தேர்வு முகாம் நேற்று தொடங்கி நாளை வரை 3 நாட்கள் நடைபெறுகிறது.
மாணவர்கள் மத்தியில் சுய ஒழுக்கம், கீழ்படிதல், கடின உழைப்பு, குழு உணர்வு, நேர மேலாண்மை, சகோதரத்துவம், மன – உடல் முழுமையான ஆரோக்கியம், படைப்பாற்றல் திறன், ஆக்கல் கலை, சேவை, வாழ்வின் வெற்றி தோல்விகளை சரியாகக் கையாளும்
திறன், முதலுதவி, தலைமைப் பண்பு ஆகியவற்றை மேம்படுத்தும் வகையில் 2ம் நாளான இன்று பள்ளியின் மைதானத்தில் மாநில உயர் விருது தேர்வு முகாம் நடைபெற்றது.
இந்த முகாமில் சுமார் 400 மாணவ மாணவியர் பங்கேற்று தனித்தனி குழுக்களாக பிரிந்து குடில் அமைத்தல், அன்றாட பயன்பாட்டு பொருட்களுக்கான தளவாடங்கள், கொடிக்கம்பம், முதலுதவி சிகிச்சை அளித்தல் உள்ளிட்ட செயல்பாடுகளின் மாதிரிகளை மிக நேர்த்தியாக செய்து அசத்தினர். அதனைத் தொடர்ந்து உடற்பயிற்சியும், கொடி பாடலுடன் முகாம் நிறைவடைந்தது. இந்த மாநில விருது தேர்வு முகாமில் தமிழ்நாடு மாநில சாரணர் அமைப்பின் தேர்வாளர்கள் 3 பேர் கலந்து கொண்டனர். பள்ளி சாரணர் மாவட்டத்தின் தலைவர் மோகனரங்கன் தலைமையில் நடைபெற்ற இந்த முகாமில் தமிழ்நாடு மாநில சாரணர் உதவி ஆணையரும், பள்ளியின் முதன்மை முதல்வருமான ராமசுப்பிரமணியன் மற்றும் சாரண ஆசிரியர்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.