இந்து சமய அறநிலைத்துறை அமைச்சர் சேகர்பாபு திருச்சி விமான நிலையத்தில் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது: திருச்செந்தூரில், 5,309 மாடுகள் மாயமான விவகாரம் கடந்த 2007ம் ஆண்டு வெளியான தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் பெறப்பட்டது. அதற்கும் தற்போதைய திமுக ஆட்சிக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. இதுகுறித்து நேற்றே நான் விளக்கமாக பதில் அளித்து விட்டேன். தேவையில்லாமல் ‘அரசியல் ஸ்டண்ட்’ அடிக்கிறார் அண்ணாமலை.
திருச்சி மலைக்கோட்டைக்கு ரோப்கார் அமைக்கும் திட்டம் என்பது, போதுமான இடமில்லாததால் சாத்தியமில்லாதாகஇருக்கிறது. அதற்கு மாற்றாக லிப்ட் அமைக்கலாமா? என்ற ஒரு மாற்றுத் திட்டத்தையும் பரிசீலனை செய்து வருகிறோம்.
உலகப் பிரசித்திப் பெற்ற பழனி திருக்கோயில் கும்பாபிஷேத்துக்காக, 47 ஆயிரம் பேர் ஆன்லைனில் விண்ணப்பித்துள்ளனர். இவர்களில், 6000 பேருக்கு மட்டுமே அனுமதி அளிக்க முடியும். அவ்வளவு தான் அங்கு இடம் இருக்கிறது. இதில், 2,000 பக்தர்கள் குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்கப்படுவர். மேலும், ஆகம விதிப்படி தமிழ் மற்றும் சமஸ்கிருதத்தில் பழனி கோயில் கும்பாபிஷேகம் நடைபெறும். அன்றைய தினம் மூலவர் தரிசனத்திற்கு பக்தர்கள் அனுமதிக்கப்பட மாட்டார்கள்.
இனி யானைகளுக்கான புத்துணர்வு முகாம் நடக்காது. காரணம் யானைகள் உள்ள இடங்களிலேயே அந்தந்த யானைகளுக்கு 15 தினங்களுக்கு ஒரு முறை மருத்துவ முகாம் நடத்தப்பட்டு மருத்துவர் பரிந்துரைப்படி உணவுகள் அளிக்கப்பட்டு நடைபயிற்சியும் அளிக்கப்படுகிறது. 29 கோயில் யானை, 3 மடத்து யானைகளும் இவ்வாறு பராமரிக்கப்படுகிறது. யானைகளுக்கு ஆங்காங்கே குளியல் தொட்டி கட்ட உத்தரவிட்டு உள்ளோம். இன்று கூட தஞ்சையில் யானைக்கான நீச்சல் குளம் திறக்கத்த்தான் செல்கிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.