சென்னிமலை அருகே உள்ள சரவணா நகரை சேர்ந்தவர் 65 வயதான மரம் ஏறும் தொழிலாளி ராமசாமி. இவருக்கு மூன்று மகன்கள் உள்ளனர். கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு மனைவி இறந்துவிட்ட நிலையில், மகன்கள் சரிவர கவனிக்காததால் தனியாக வசித்து வந்துள்ளார். இதனிடையே, சமீப காலமாக உடல் நலம் பாதிக்கப்பட்டதால் வேலைக்கு செல்ல முடியாமல் இருந்துள்ளார். இதனால், மகன்களின் வீடுகளுக்கு சென்று உணவருந்தி விட்டு தனது வீட்டிற்கு வருவதையும் வாடிக்கையாக கொண்டுள்ளார். தனக்கு உடல் நலம் பாதிக்கப்படுவதற்கு மருமகள் செய்வினை வைத்து விட்டதாக கூறி வந்துள்ளார்.
இந்நிலையில் நேற்று சென்னிமலை அருகே மணிமலையில் உள்ள மூத்த மகன் வீட்டிற்கு ராமசாமி சென்று உள்ளார். அப்போது மருமகள் ஜோதிலட்சுமியுடன் தகராறு ஏற்பட்டுள்ளது. தனக்கு மருமகள் செய்வினை வைத்ததால் தான், தன்னால் எந்த வேலைக்கும் செல்ல முடியாமல் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறி மருமகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். வாக்குவாதம் முற்றியதில் மறைத்து வைத்திருந்த அரிவாளால் மருமகள் ஜோதிலட்சுமியை வெட்டி உள்ளார். ஜோதிலட்சுமி கூச்சலிட்டதால் அங்கிருந்து அவர் தப்பி சென்றார்.
இதனிடையே, படுகாயம் அடைந்த ஜோதிலட்சுமியை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த சென்னிமலை போலீசார் ராமசாமியை கைது செய்தனர்.