மயிலாடுதுறை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பள்ளி மாணவர்கள் மற்றும் இளைஞர்களை குறி வைத்து கஞ்சா விற்பனை நடைபெற்று வருவதாக புகார்கள் எழுந்துள்ளன. தொடர்ந்து கஞ்சா விற்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க எஸ்.பி. மீனா உத்தரவிட்டுள்ளார். இதனை அடுத்து மாவட்டத்திலுள்ள காவல் சரகத்திற்கு உட்பட்ட பகுதிகளில் கஞ்சா தேடுதல் வேட்டையை போலீசார் தீவிர படுத்தியுள்ளனர். இந்நிலையில் சீர்காழி உப்பனாற்றங்கரையில் கஞ்சா விற்கப்படுவதாக கிடைத்த தகவலின் பேரில் தனிப்படை காவல் ஆய்வாளர் மணிகண்டகணேஷ் தலைமையிலான போலீசார் விரைந்து சென்றனர். அங்கு கஞ்சா விற்பனை ஈடுபட்டிருந்த சீர்காழி சேந்தங்குடி பள்ளிவாசல் தெருவை சேர்ந்த முகமது பைசல் (21), வேட்டங்குடி கிராமத்தைச் சேர்ந்த கவின் குமார் (22), ஆகியோரை கைது செய்து அவர்களிடம் இருந்த ஒரு கிலோ 100 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர். இதுபோல அரசூர் ரவுண்டானா பகுதியில் கஞ்சா விற்பனை செய்த அதே பகுதியை சேர்ந்த சஞ்சய் (19) என்பவரை கைது செய்த கொள்ளிடம் போலீசார் அவரிடமிருந்து 100 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
