கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அருகே உள்ள தனியார் பள்ளி ஒன்றில் கடந்த 5ஆம் தேதி முதல் 9ஆம் தேதி வரை போலியாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த தேசிய மாணவர் படையின் (என்.சி.சி.) பயிற்சி முகாம் நடைபெற்றது. இதில் 17 மாணவிகள் கலந்து கொண்டனர். இந்த மாணவிகள் அனைவரும் பள்ளியில் உள்ள கலையரங்கில் தங்கியுள்ளனர். இத்தகைய சூழலில் தான் கடந்த 9 ஆம் தேதி கலையரங்கில் வழக்கம்போல் 12 வயது சிறுமி ஒருவர் உறங்கிக் கொண்டிருந்துள்ளார். அன்றைய தினம் அதிகாலை 3 மணியளவில் அங்கு வந்த தேசிய மாணவர் படையின் பயிற்றுநர் என்று கூறிய காவேரிப்பட்டினத்தைச் சேர்ந்த சிவராமன் (32) சிறுமியை அங்கிருந்து அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தி இருக்கும் நிலையில், இது தொடர்பாகப் பள்ளியின் தலைமை ஆசிரியர் உள்ளிட்ட பலர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதில் முக்கிய நபராக கைது செய்யப்பட்ட நாம் தமிழர் கட்சியின் முன்னாள் நிர்வாகி சிவராமன், எலி பேஸ்ட் சாப்பிட்டு தற்கொலை செய்து கொண்டார். அதேசமயம் சிவராமனின் தந்தையும் சாலையில் மதுபோதையில் இருந்த போது இருசக்கர வாகன விபத்தில் சிக்கி கீழே விழுந்து காயமடைந்து உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இந்நிலையில் சென்னையில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களைச் சந்தித்து பேட்டி அளித்தார். அப்போது அவர் நா.த.க. முன்னாள் நிர்வாகி சிவராமன் தற்கொலை செய்து கொண்டது குறித்து அவர் பேசுகையில், “இதன் பின்னணியில் வேறு யாரோ இருக்கிறார்கள் என்ற சந்தேகமும் எனக்கு இல்லை. இந்தக் குற்றச் செயலில் ஈடுபட்டதால் ஏற்பட்ட குற்ற உணர்ச்சி இருந்ததால்தான் தற்கொலை செய்துள்ளார். ரொம்ப நாட்களுக்கு முன்பே சிவராமன், ‘நான் சாகப்போகிறேன். என்னை மன்னித்து விடுங்கள்’ என வருத்தம் தெரிவித்து கடிதம் எழுதியிருந்தார். இது தொடர்பாகக் கட்சித் தொண்டர்களிடம் அந்த கடிதத்தைக் கொடுத்து விசாரிக்கச் சொன்னேன். இதனையடுத்து சிவராமன் தவறு செய்தது தெரிந்ததும், அவரை போலீசில் பிடித்துக் கொடுத்ததே நாம் தமிழர் கட்சியின் தொண்டர்கள்தான். சிவராமன் செய்த தவற்றால் அடைந்த மனவேதனையில் அவரது அப்பாவும் மதுபோதையில் கீழே விழுந்து உயிரிழந்துள்ளார். இதில் எந்த சந்தேகமும் இல்லை. இதன் பின்னணியில் யாரும் இல்லை” எனத் தெரிவித்துள்ளார்.