நடிகர் விஜய் கட்சி தொடங்கியதை பல முறை வரவேற்ற நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், அவரது மாநாட்டுக்கு உணர்வுபூர்வமாக வாழ்த்தும் தெரிவித்திருந்தார். இந்நிலையில் விக்கிரவாண்டியில் மாநாடு நடத்திய நடிகர் விஜய், ‘திராவிடமும் தமிழ் தேசியமும் தான் எங்கள் கொள்கை’ என்று அறிவிப்பு வெளியிட்டார். மேலும் கோபமா பேசறது, ஏத்தம் இறக்கமா பேசறது அதனால எந்த பலனும் இல்லை என சீமானை கிண்டல் செய்து பேசினார். விஜயின் இந்த பேச்சு வைரலானது. இதனால் சீமான் தரப்பினர் அதிர்ச்சியடைந்தனர்.
இந்நிலையில் சென்னையில் நடந்த பொதுக்கூட்டத்தில், நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசியதாவது.. கழிப்பிடம், மது குடிப்பிடத்தை தவிர, எல்லா இடங்களுக்கும், கருணாநிதி பெயர் சூட்டப்பட்டு வருகிறது. மது குடிப்பிடம்தான் அவர் பெயர் வைப்பதற்கு சிறந்த இடமாக இருக்கும். திராவிடமும், தமிழ் தேசியமும் ஒன்றல்ல. நான் குட்டிக்கதை சொல்பவன் அல்ல. சாம்பார் என்றால் சாம்பார் என சொல்ல வேண்டும்; கருவாட்டு குழம்பு என்றால் கருவாட்டு குழம்பு என்று சொல்ல வேண்டும். இரண்டையும் சேர்த்து, கருவாட்டு சாம்பார் என்று சொல்லக் கூடாது. காட்டுப்பூனையும், நாட்டு கோழியும் ஒன்றா? திராவிடமும், தமிழ் தேசியமும் ஒன்று என்பது கொள்கை அல்ல; அது, அழுகிய கூமுட்டை. சாலையில் ஏதாவது ஒரு பக்கம் நிற்கவேண்டும்; நடுவில் நின்றால் லாரி அடித்து இறந்துவிடுவாய். தமிழகத்தில், 75வது ஆண்டு பொன் விழா கொண்டாடும் கட்சிக்கு, திராவிடம் என்றால் என்ன என்று சொல்ல தெரியவில்லை இவ்வாறு சீமான் பேசினார்.