ஈரோடு இடைத்தேர்தல் பிரச்சாரத்தின் போது அருந்ததியர் சமூகம் குறித்து தரக்குறைவாக பேசியதாக சீமான் மீது தொடரப்பட்ட வழக்கில் அவருக்கு பிணை வழங்க மனுதாரர் தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. விசாரணைக்காக சீமான் ஆஜராகாததால் வழக்கை இம்மாதம் 30 தேதிக்கு ஒத்திவைத்த நீதிமன்றம், அந்நாளில் சீமான் நேரில் ஆஜராகவும் உத்தரவு பிறப்பித்துள்ளது.
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட்ட நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் மேனகா நவநீதனுக்கு ஆதரவாக, கடந்த பிப்ரவரி 13ம் தேதி ஈரோடு திருநகர் காலனியில் பிரசார பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில், பேசிய நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், அருந்ததியர் சமூகம் குறித்தும், புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் பற்றியும் பேசிய கருத்துகள் சர்ச்சையை ஏற்படுத்தியது. தலித் அமைப்பினர் அளித்த புகாரின் பேரில் சீமான் மீது எஸ்.சி., எஸ்.டி., வன்கொடுமை தடுப்பு சட்டம், ஐபிசி 153B(1)(c) 505(1)(c), 506(1) உள்பட மொத்தம் 4 பிரிவுகளின் கீழ் ஈரோடு, கருங்கல்பாளையம் போலீசார் வழக்குப் பதிவு செய்தனர்
இந்த வழக்கு கடந்த மாதம் பதினொன்றாம் தேதி விசாரணைக்கு வந்த போது சீமான் நேரில் ஆஜராகி இருந்தார். அப்போது இந்த வழக்கில் பிணை கேட்டு மனு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கின் விசாரணையும், பிணை மனு மீதான விசாரணையும் இன்று ஒத்திவைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் ஈரோடு மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்ற விசாரணையில், மனுதாரர் பகுஜன் சமாஜ் கட்சி மாவட்ட தலைவர் ஈஸ்வரன் தரப்பில் சீமானுக்கு பிணை வழங்க எதிர்ப்பு தெரிவித்து மனு தாக்கல் செய்யப்பட்டது. மேலும், மூன்றாம் தரப்பாக தனிநபர்கள் இருவர் ஆட்சேபனை மனு தாக்கல் செய்தனர். சீமான் மருத்துவ பரிசோதனைக்கு செல்வதால் வர இயலவில்லை என அவரது வழக்கறிஞர் மனு செய்தார்.
இதனை விசாரித்த நீதிபதி முருகேசன், சீமான் இன்று ஆஜராகாததால், பிணை மனு மீதான விசாரணையை வரும் 30.ம் தேதிக்கு ஒத்தி வைத்தார். மேலும் அன்றைய தினம் சீமான் நேரில் ஆஜராக வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டார். பட்டியலின அருந்ததியர் சமூகத்திற்கும் மற்ற சமூகத்திற்கும் இடையே பிரிவினையையும், மோதலையும் தூண்டும் வகையில் சீமான் தொடர்ந்து பேசி வருவதால் அவருக்கு பிணை வழங்காமல் கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனுதாரர் தரப்பில் வலியுறுத்தியதாக அவரது வழக்கறிஞர் பார்த்தீபன் தெரிவித்தார்..