Skip to content

சிக்கலில் சீமான்.. பிரபாகரன் படத்தை பொது வெளியில் பயன்படுத்த தடை கோரி பரபர மனு

  • by Authour

இந்தியாவில் தடை செய்யப்பட்ட தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரனின் படத்தை பொது வெளியில் பயன்படுத்த நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு தடை விதிக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநலன் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

சென்னையை சேர்ந்த வழக்கறிஞர் எல்.கே சார்லஸ் அலெக்சாண்டர் உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது: சி.பா. ஆதித்தனார் அவர்களால் நாம் தமிழர் கட்சி கடந்த 1958ம் ஆண்டு துவங்கப்பட்டது. அவரது மறைவுக்கு பின், திரைப்பட இயக்குநர் சீமான் 2010ம் ஆண்டு முதல் தலைமை ஒருங்கிணைப்பாளராக நாம் தமிழர் கட்சியை நிர்வகித்து வருகிறார். 

இந்த நிலையில் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் மற்றும் இலங்கை அரசுக்கும் இடையே யுத்தம் நடைபெற்ற இறுதி கால கட்டத்தில், விடுதலை புலிகள் இயக்கத்தின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனை தாம் போர் முனையில் நேரில் சந்தித்ததாகவும், அந்த சந்திப்பின் போது ஏ.கே 47 மற்றும் ஏகே 74 ரக துப்பாக்கிகள் போர் பயிற்சி எடுத்ததாகவும் தமிழகத்தில் சீமான் பொது மேடைகளில் பேசி வருகிறார். 1991-ம் ஆண்டு முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி, லோக்சபா தேர்தல் பிரச்சாரத்திற்கு தமிழகம் வந்தபோது மனித குண்டு வெடிப்பில் கொல்லப்பட்டார். இதையடுத்து தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்துக்கு இந்தியாவில் தடை விதித்ததுடன், கடுமையான நடவடிக்கைகளை மத்திய அரசு எடுத்தது. தற்போதும் இந்தியாவில் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்துக்கான தடை நீடிக்கிறது. விடுதலைப் புலிகள் இயக்கத்துக்கு எதிராக மத்திய அரசு பல்வேறு கடுமையான நடவடிக்கைகளை எடுத்து வரும் நிலையில், இலங்கை போர் தொடர்பாக வன்முறையை தூண்டும் வகையிலும், “மார்பிங்” செய்யப்பட்ட புகைப்படங்களையும் சீமான் பயன்படுத்தி வருகிறார்.

விடுதலை புலிகள் இயக்கத்துக்கு இந்தியாவில் தடை விதித்திருக்கும் போது, அனைத்து தேர்தல் பிரச்சாரங்களிலும் தடை செய்யப்பட்ட அந்த இயக்கத்தின் தலைவர் பிரபாகரனின் படத்தை அரசியல் ஆதாயத்திற்காக சீமான் பயன்படுத்தி வருகிறார். மேலும், பிரபாகரனுடன் தாம் இருப்பது போலவும், ஏ.கே 47 துப்பாக்கி வைத்திருப்பது போலவும் மார்பிங் செய்து படங்களை பயன்படுத்தி வருகிறார் என திரைப்பட இயக்குநர் சங்ககிரி ராஜ்குமார் தெரிவித்துள்ளார். கள்ளக்குறிச்சி தேர்தல் பிரச்சாரத்தில் முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தியை நாங்கள் தான் கொலை செய்தோம் என சீமான் பகிரங்கமாக பேசியுள்ளார். அதனால், தடை செய்யப்பட்ட தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரன் படத்தை பயன்படுத்த நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு தடை விதிக்க வேண்டும் என மத்திய- மாநில அரசுகளுக்கு மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. அதனால், பிரபாகரனின் படத்தை பொது வெளியில் பயன்படுத்த சீமானுக்கு தடை விதிக்க வேண்டும். இவ்வாறு சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநலன் மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

error: Content is protected !!