வங்காளதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் சட்டோகிராமில் நடந்த முதலாவது டெஸ்டில் இந்தியா 188 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.
இந்த நிலையில் இந்தியா- வங்காளதேசம் இடையிலான 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி டாக்கா அருகே உள்ள மிர்புரில் இன்று (வியாழக்கிழமை) நடக்கிறது. இதில், டாஸ் வென்ற வங்காளதேச அணி பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி வங்காளதேச அணி முதலில் பேட்டிங் செய்தது. தொடக்கத்தில் அந்த அணியின் ஜாகிர் ஹசன் 24ரன்களிலும் , நஜ்முல் ஹொசைன் 15 ரன்களிலும் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர்.பின்னர் வந்த மொமினுல் ஹக் நிலைத்து ஆடி ரன்கள் குவித்தார். மறுபுறம் வங்காளதேச அணியின் பேட்ஸ்மேன்கள் சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்தனர். ஷாகிப் அல் ஹாசன் 16 ரன்கள் , ரஹீம் 25 ரன்கள் , லிட்டன் தாஸ் 25 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தனர். மறுபுறம் சிறப்பாக் ஆடிய மொமினுல் ஹக் அரைசதம் அடித்து 82 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். இறுதில் 73.5 ஓவர்களில் 10 விக்கெட்டுகளையும் இழந்து 227 ரன்களுக்கு வங்காளதேச அணிஆட்டமிழந்தது. இந்தியா சார்பில் அஸ்வின் , உமேஷ் யாதவ் தலா 4 விக்கெட்டும் , உனட்கட் 2 விக்கெட்டும் வீழ்த்தினர். இதனை தொடர்ந்து , இந்திய அணி முதல் இன்னிங்சை தொடங்கியது. கேப்டன் ராகுல், கில் ஆகியோர் பேட் செய்தனர். இந்திய அணி விக்கெட் இழப்பின்றி 8 ஓவர்களில், 19 ரன்கள் எடுத்திருந்த நிலையில் போதிய வெளிச்சம் இல்லாததால் ஆட்டம் முடித்துக்கொள்ளப்பட்டது.