திருச்சி பொன்மலை ரயில்வே மைதானத்தில் நாளை (5ம் தேதி) தேசிய அளவிலான 20 வது அகில இந்திய ரயில்வே ஜம்போரெட் நடைபெறுகிறது. இதில் தெற்கு ரெயில்வே சார்பில் பாரத் சாரணர் மற்றும் வழிகாட்டிகளால் எங்கள் கலாச்சாரம் பாரம்பரியத்தை நினைவு கூருங்கள் என்ற தலைப்பில் 5ம் தேதி முதல் 9ம் தேதி வரை அணி வகுப்புகள், இக்கட்டான நேரத்தில் அவர்களின் திறனை வெளிப்படுத்தும் செயல்பாடுகள், கூடாரங்கள் அமைத்தல், அந்தந்த மாநிலங்களின் கலாச்சார நிகழ்ச்சிகள், கலை நிகழ்ச்சிகள் உள்ளிட்டவைகள் நடைபெற இருக்கின்றன.
இதில் நாடு முழுவதும் இருந்து 16 ரயில்வே துறை சார்பாக சாரணர் மற்றும் வழிகாட்டிகள் கலந்து கொள்கின்றனர். இதில் சிறப்பு விருந்தினர்களாக ரயில்வே உயர் அதிகாரிகள் மற்றும் அந்தந்த ரயில்வே துறை
பொது மேலாளர்கள், சாரணர் இயக்கத்தின் பொது செயலாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொள்கின்றனர். இதற்காக பொன்மலை பகுதியை சுற்றிலும் பிரம்மாண்டமான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. இதில் கலந்து கொள்வதற்காக முன்கூட்டியே பாரத் சாரணர் மற்றும் வழிகாட்டிகள் பொன்மலை ரயில்வே மைதானத்தில் கூடாரங்களை அமைத்துள்ளனர். இதில் 2500 க்கும் மேற்பட்ட சாரணர் இயக்கத்தை சேர்ந்தவர்கள் கலந்து கொள்வார்கள் என தெற்கு ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.
வரும் 7ம் தேதி நடைபெறும் நடைபெறும் சாரணர் மட்டும் வழிகாட்டிகளின் நிகழ்ச்சிகளில் தமிழ்நாடு பள்ளி கல்வித்துறை அமைச்சரும் தமிழ்நாடு பாரத் சாரணர் மற்றும் வழிகாட்டிகளின் தலைவருமான அன்பில் மகேஷ் பொய்யாமொழி கலந்து கொள்கிறார்.