Skip to content
Home » அரசியல் விஞ்ஞானி கதையை கேளுங்க? ….. செல்லூர் ராஜூ பிளாஷ் பேக்

அரசியல் விஞ்ஞானி கதையை கேளுங்க? ….. செல்லூர் ராஜூ பிளாஷ் பேக்

  • by Senthil

மதுரை விளாங்குடி பகுதியில் அ.தி.மு.க. சார்பில் அண்ணா பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ கலந்துகொண்டு பேசியதாவது: கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் 10 ஆண்டுகளாக தமிழக கூட்டுறவுத்துறை அமைச்சராக இருந்தேன். ஆனால் ஒரே ஒரு சம்பவத்தின் மூலம் நான் உலகம் முழுவதும் அரசியல் விஞ்ஞானியாக கலாய்க்கப்பட்டு வருகிறேன்.  அந்த கதையை , நீங்களும் கேளுங்கள்.

மதுரை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் வறட்சி நிவாரண கூட்டம் அப்போதைய கலெக்டர் வீரராகவராவ் முன்னிலையில் நடைபெற்றது. அந்த சமயம் சித்திரை திருவிழா காலம் என்பதால் மதுரை வைகை ஆற்றில் 15 லட்சம் மக்கள் கூடும் நிலையை கருத்தில் கொண்டு பொதுமக்களுக்கு தேவையான குடிநீர் மற்றும் கள்ளழகர் வைகை ஆற்றில் தண்ணீரில் இறங்க வேண்டும் என்பதை கருத்தில் கொண்டும் ஏற்பாடுகள் செய்ய அதிகாரிகளிடம் ஆலோசித்தேன்.

அப்போது வைகை அணையில் தண்ணீர் குறைவாக இருந்தது. எனவே இருக்கும் தண்ணீரை வைத்து 4 அல்லது 5 நாட்களுக்கு ஒரு முறை குடிநீர் வழங்கலாம், அதற்குள் மழை வந்துவிடும் பிறகு நிலைமையை சமாளிக்கலாம் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். ஆனால் எதிர்பார்த்த மழை இல்லை. இந்த நிலையில் 4 நாட்கள் கழித்து கலெக்டர் என்னை செல்போனில் அழைத்தார். நாம் வைகை அணைக்கு செல்ல வேண்டும். அங்கே முதன்மை பொறியாளர் ஒரு திட்டத்தை வைத்துள்ளார். அதன்மூலம் நீர் ஆவியாவதை தடுக்கலாம். அதன் மூலம் வைகை அணையில் நீரை ஓரளவு சேமிக்கலாம் என்றார்.

இது தொடர்பாக கலெக்டர் மற்றும் முதன்மை பொறியாளரிடம் விளக்கம் கேட்டேன். அவர்களும் இது சாத்தியமானது தான். ராஜஸ்தான் பல்கலைக்கழகம் இதனை பரீட்சார்த்த முறையில் வெற்றிகரமாக செய்துள்ளது என்று தெரிவித்தனர். நானும் கட்சி நிர்வாகிகளுடன் 15-க்கும் மேற்பட்ட கார்களில் வைகை அணைக்கு சென்றேன். அங்கு சென்றதும் அதிகாரிகள் அணையின் உள் பகுதியில் தெர்மாகோல் அட்டைகளை வரிசையாக அடுக்கி வைத்து தயாராக இருந்தனர். அப்போது நானும் அங்கு வைக்கப்பட்டிருந்த தெர்மாகோல் அட்டைகளை வைகை அணை தண்ணீரில் வைத்தேன்.

வைத்தது தான் தாமதம் அந்த நேரத்தில் வீசிய காற்றின் வேகத்தில் தெர்மாகோல் அட்டைகள் அனைத்தும் பறந்தன. இந்த செய்தி பரவி உலகம் முழுவதும் என்னை அரசியல் விஞ்ஞானி என்று நெட்டீசன்களால் இப்போது வரை கலாய்க்கப்பட்டு வருகிறேன். மக்களுக்காக ஏதாவது செய்ய வேண்டும் என்பதற்காக ரிஸ்க் எடுத்தேன். அதற்காக ரஸ்க் ஆகி விட்டேன். இவ்வாறு செல்லூர் ராஜூ கலகலப்பாக பேசினார். அவரது பேச்சை ரசித்து கேட்டுக்கொண்டிருந்த அ.தி.மு.க. நிர்வாகிகளும், தொண்டர்களும், பொதுமக்களும் இதனை கேட்டு சிரித்தனர்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!