தமிழகத்தில் கோடை விடுமுறை முடிந்து 6 முதல் பிளஸ்-2 வகுப்பு வரையிலான வகுப்புகளுக்கு இன்று பள்ளிகள் திறக்கப்படும் என அரசு அறிவித்தது. அதன்படி இன்று பள்ளிகள் திறக்கப்பட்டன. ஒன்றரை மாத விடுமுறைக்கு பின் மாணவ, மாணவிகள் மகிழ்ச்சியுடன் இன்று பள்ளிகளுக்கு வந்தனர்.
பெரும்பாலான தனியார் பள்ளிகளில் இன்றே சீருடையுடன் குழந்தைகள் வந்திருந்தனர். புதிதாக வகுப்புகளில் சேர்ந்த மாணவ, மாணவிகளை அவர்களது பெற்றோர் அழைத்து வந்திருந்தனர். அனைவரும் தங்கள் நண்பர், தோழிகளை வெகுநாட்களுக்கு பின்னர் இன்று நேரில் சந்தித்ததால் மகிழ்ச்சியுடன் காணப்பட்டனர்.
சென்னை விருகம்பாக்கத்தில் உள்ள ஜெய்கோபால் கரோடியா அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில், கோடை விடுமுறை முடிந்து இன்று பள்ளிக்கு வந்த மாணவிகளுக்கு அமைச்சர் அன்பில் மகேஷ் பூங்கொத்து கொடுத்து வரவேற்றார். மாணவிகளுக்கு இனிப்பு, மலர் கொடுத்து வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் பள்ளிக்கல்வித்துறை செயலாளர் காகர்லா உஷா மற்றும் கல்வி அதிகாரிகள் பங்கேற்றனர்.
இதுபோல சில தனியார் பள்ளிகளில் மாணவிகளுக்கு பூக்கள், சாக்லேட் கொடுத்து வரவேற்றனர். சில பள்ளிகளில் வாழை தோரணங்கள் கட்டி பள்ளி விழாக்கோலத்துடன் காணப்பட்டது. சில தனியார் பள்ளிகளில் மேளதாளம் முழங்க குழந்தைகளுக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது.
வெயிலின் கொடூரம் காரணமாக 2 வாரம் பள்ளிகள் திறப்பு தாமதம் ஆனது. அதனால் வரும் சனிக்கிழமைகளில் வகுப்புகள் நடத்தி அந்த நாட்கள் ஈடுசெய்யப்படும் என அரசு அறிவித்துள்ளது. மாணவ, மாணவிகளுக்கு இன்றே பாடப்புத்தகங்ள் நோட்டுகள் வழங்க அனைத்து பள்ளிகளிலும் புத்தகங்கள், நோட்டுகள் தயார் நிலையில் வைக்கப்பட்டு உள்ளது. 14ம் தேதி முதல் 1முதல் 5ம் வகுப்பு வரையிலான குழந்தைகளுக்கான வகுப்புகள் தொடங்குகிறது.