கோவை சாய்பாபாகாலனி பகுதியை சேர்ந்த ஹரி கிருஷ்ணன்,ராஜேஷ்வரி ஆகிய தம்பதியரின் மகன் பரத் கார்த்திக். பத்தாம் வகுப்பு பயின்று வரும் பரத் தனது சிறு வயது முதலே கணிணி தொடர்பான துறையில் அதிக ஆர்வம் காட்டி வந்துள்ளார்.இந்நிலையில் இவரது ஆர்வத்தை கண்ட பெற்றோர் இவருக்கு லேப்டாப் உள்ளிட்ட கணிணி தொடர்பான சாதனங்களை வாங்கி கொடுத்துள்ளனர். இதனை தொடர்ந்து தனது சொந்த முயற்சியால் மாணவன் பரத் ட்ரோல் சாட்,ட்ரோல் மீட்,மை கீ,லம்போகார்ட்,ட்ரோல் ரூம் உள்ளிட்ட செயலிகளை உருவாக்கி அந்த செயலிகளை கல்வி நிலையங்களுக்கு பயன்படுத்தி அதில் வெற்றியும் கண்டுள்ளார்.
தற்போது கோவையில் உள்ள சில கல்லூரிகளுக்கு அறிவுரையாளராக பணியாற்றி வரும் சிறுவன் பரத் கார்த்திக் தனது செயலி குறித்து கூறுகையில்,தற்போது பள்ளிகளில் நடைபெறும் பாட வகுப்பு மற்றும் அது தொடர்பான தேர்வுகளில் மாணவ,மாணவிகளின் செயல்பாடுகளை பெற்றோர்கள் நேரடியாக இந்த செயலிகள் வாயிலாக தெரிந்து கொள்ள முடியும் என
தெரிவித்தார்.தனது இளம் வயதிலேயே பரத் உருவாக்கிய செயலிகள் பல்வேறு பள்ளி,கல்லூரிகளில் பயன்படுத்தி வருவது குறிப்பிடதக்கது.பள்ளி பருவத்திலேயே பத்துக்கும் மேற்பட்ட செயலி மற்றும் வலை தளங்களை உருவாக்கிய சிறுவன் பரத்தின் திறமையை கண்ட நோபள் உலக சாதனை புத்தகம் அவருக்கு உலகின் இளம் தொழில் முனைவோர் எனும் சாதனை விருதை வழங்கி கவுரவித்துள்ளனர். இதற்கான சான்றிதழ் மற்றும் பதக்கங்களை நோபல் உலக சாதனை புத்தகத்தின் பதிப்பாளர் தியாகு நாகராஜ் பரத்தின் இல்லத்திற்கே நேரடியாக சென்று வழங்கி கவுரவித்தார்.