தஞ்சை அருகே திட்டை கீழத்தெருவை சேர்ந்தவர் ராஜேந்திரன். இவருடைய மகன் மகேஸ்வரன் (26). பெயிண்டர். இவர் தஞ்சையில் உள்ள ஒரு பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்த மாணவியுடன் பழகி வந்தார். இந்நிலையில் கடந்த 2018-ம் ஆண்டு வீட்டில் தனியாக இருந்த மாணவியை திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி மகேஸ்வரன் முறைகேடாக நடந்து கொண்டார்.
மாணவியின் பெற்றோர் கூலி வேலைக்கு செல்பவர்கள் என்பதால் பள்ளி விடுமுறை நாட்களில் மாணவி வீட்டில் தனியாக இருந்த போதும் அவரை வற்புறுத்தி மகேஸ்வரன் முறைகேடாக நடந்து வந்துள்ளார். இதனால் மாணவி 2 மாதம் கர்ப்பிணியானார்.
இதையறிந்த மாணவியின் பெற்றோர் வல்லம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர். இதன்பேரில் அப்போதைய இன்ஸ்பெக்டர் கலைவாணி மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து மகேஸ்வரனை கைது செய்தனர். இந்த வழக்கு தஞ்சையில் உள்ள போக்சோ கோர்ட்டில் நடந்து வந்தது. வழக்கை நீதிபதி சுந்தர்ராஜன் விசாரித்து பெயிண்டர் மகேஸ்வரனுக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.20 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பு கூறினார். மேலும் அபராதம் கட்ட தவறினால் மேலும் ஓராண்டு சிறை தண்டனை விதித்து உத்தரவிட்டார்.
பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ரூ.2 லட்சம் இழப்பீடு வழங்குமாறு அரசுக்கு பரிந்துரை செய்தார். இந்த வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் சசிரேகா ஆஜராகி வாதாடினார்.