இந்திய ராணுவ வரலாற்றில், ஒரே பள்ளியில் ஒன்றாக படித்தவர்கள் தளபதிகளாக நியமிக்கப்படுவது இதுவே முதன்முறையாகும். லெப்டினன்ட் ஜெனரல் உபேந்திர திவேதி இந்திய தரைப் படைத் தளபதியாகவும், அட்மிரல் தினேஷ் திரிபாதி இந்திய கடற்படைத் தளபதியாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
உபேந்திர திவேதியும், தினேஷ் திரிபாதியும் 1970-ம் ஆண்டு மத்திய பிரதேசத்தில் உள்ள ரிவா சைனிக் பள்ளியில் 5-வது வகுப்பு முதல் ஒன்றாக படித்தவர்கள். ஆரம்பம் முதலே இருவரும் நல்ல நண்பர்களாக இருந்துள்ளனர். பின்னர் வெவ்வேறு படைகளில் செயல்பட்டு வந்த போதிலும், இருவருக்கும் இடையிலான நட்பு தொடர்ந்து வந்துள்ளது.
தற்போது இருவரும் ஒரே சமயத்தில் ராணுவத்தின் உயரிய பொறுப்புகளில் நியமிக்கப்பட்டுள்ளனர்.
கடந்த மே 1-ம் தேதி அட்மிரல் தினேஷ் திரிபாதி இந்திய கடற்படை தளபதியாக பொறுப்பேற்றார். லெப்டினன்ட் ஜெனரல் திவேதி நேற்று இந்திய தரைப்படையின் தளபதியாக பொறுப்பேற்றார். திவேதி, லடாக்கில் இந்திய, சீன எல்லைப் பிரச்சினையில் நீண்ட அனுபவம் கொண்டவர்.
“ஒரே பள்ளியில் ஒன்றாகபடித்தவர்கள் தரைப்படைத் தளபதியாகவும் கடற்படைத் தளபதியாகவும் நியமிக்கப்பட்டிருப்பது மிகஅரிதான நிகழ்வு” என்று பாதுகாப்புத் துறை செய்தித் தொடர்பாளர் பாரத் பூஷன் பாபு தெரிவித்துள்ளார்.