மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான், இன்று தமிழக முதல்வருக்கு எழுதிய கடிதத்தில், புதிய கல்வி கொள்கையில் அரசியல் செய்ய வேண்டாம். புதிய கல்வி கொள்கையை ஏற்காவிட்டால் தமிழகம் ரூ.5 ஆயிரம் கோடி நிதியை இழக்கும் என்று கூறி இருந்தார்.
இதற்கு தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பதிலளித்து உள்ளார். அஇது தொடர்பாக அவர் திருச்சியில் இன்று நிருபர்களிடம் கூறியதாவது:
புதிய கல்விக் கொள்கை இடைநிற்றலை அதிகரிக்கும். 3வது மொழியை திணிப்பது அரசியல் சாசனம், மாநில உரிமைக்கு எதிரானது. தமிழகம் ஏற்கனவே தரமான கல்வயை வழங்கி வருகிறது. இருமொழி கொள்கையை பின்பற்றும் தமிழகம் அனைத்து துறைகளிலும் உயர் இடங்களில் உள்ளது. இந்தி மொழியை விரும்பி கற்பதை யாரும் எதிர்க்கவில்லை.
மும்மொழி கொள்கை என்பது இந்தி திணிப்பை மறைமுகமாக கொண்டு வருவது. மாணவர்களின் நலனில் மத்திய அரசுக்கு அக்கறை இருந்தால், நிதி தருவதற்கு நிபந்தனை விதிக்க கூடாது. இந்தி திணிப்பால் 56 மொழிகள் அழிந்து விட்டன. அதே நிலை தமிழுக்கும் வந்து விடக்கூடாது. மும்மொழி கொள்கையை தமிழ்நாடு ஒருபோதும் ஏற்காது.
3வது மொழி கற்பதால், மாணவர்களுக்கு மன உளைச்சல் அதிகரிக்கும். இரு மொழிக்கொள்கையில் தமிழ்நாட்டின் அனைத்து முக்கிய கட்சிகளும் ஆதரவாக உள்ளன. இந்தி இல்லாமலே தமிழக மாணவர்கள் உலகளாவிய சாதனைகள் புரிந்து வருகிறார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.