தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு அருகே பூவத்துாரில், ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் 127 மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். அரசு சார்பில் நான்கு ஆசிரியர்களும், பெற்றோர் ஆசிரியர் கழகம் சார்பில் இரு ஆசிரியர்களும் பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில் இன்று 31 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு தொடக்க கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கைக் குழுவில் உள்ள ஆசிரியர்கள் (டிட்டோஜாக்) ஒரு நாள் அடையாள வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.
வழக்கம் போல் பூவத்துாரில் காலை மாணவர்களும், தற்காலிக ஆசிரியர்களும் பள்ளிக்கு வந்தனர். வகுப்பறை திறந்து இருந்த நிலையில், மாணவர்கள் வகுப்பறையில் அமர்ந்து இருந்தனர். அப்போது, அங்கு வந்த பள்ளி தலைமையாசிரியை கண்ணகி, மாணவர்களை வெளியேற்றி விட்டு வகுப்பறையை பூட்டி விட்டு சென்றார். இதனால் மாணவர்கள் வகுப்பறைக்கு வெளியே வராண்டாவில் அமர்ந்து இருப்பதாக பெற்றோர்கள், பெற்றோர் ஆசிரியர் கழகத்தினர் தகவல் கிடைத்தது.
இதையடுத்து அங்கு வந்த பெற்றோர்கள், பெற்றோர் ஆசிரியர் கழகத்தினர், கல்வித்துறை அதிகாரிகளுக்கு தகவல் அளித்தனர். உடனடியாக கல்வித்துறை அதிகாரிகளின் ஏற்பாட்டின்படி பள்ளி வகுப்பறையின் பூட்டுகளை திறக்கப்பட்டு, இரண்டு மணி நேரமாக வெளியில் காத்திருந்த மாணவர்களை, வகுப்பறைக்கு உள்ளேச் செல்ல, பெற்றோர் ஆசிரியர் கழகத்தினால் நியமிக்கப்பட்ட ஆசிரியர்கள் வகுப்புகளை துவங்கினர்.