மதுரை மாவட்டம் எஸ்எஸ் காலனி பகுதியில் வசித்து வருபவர் மைதிலி ராஜலட்சுமி. இவரது மகன் அருகில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் 7ம் வகுப்பு படித்து வருகிறான். மாணவன் தந்தை ராஜசேகர் என்பவர் ஆறு மாதங்களுக்கு முன்பு தற்கொலை செய்து கொண்டார். வழக்கம் போல், நேற்று காலை மாணவன் ஆட்டோவில் பள்ளிக்கு சென்ற நிலையில், திடீரென ஆட்டோவை, காரில் வந்த மர்ம கும்பல் வழிமறித்து, கத்தியை காட்டி மிரட்டினர். ஆட்டோ ஓட்டுநர் பால்பாண்டியோடு சேர்த்து, மாணவனையும் கடத்தினர்.
இதையடுத்து சிறுவனின் தாய் மைதிலி ராஜலட்சுமியை செல்போனில் தொடர்பு கொண்டு, ரூ.2 கோடி தந்தால் தான் மகனை விடுவிப்போம் என மிரட்டல் விடுத்தனர். சிறுவனின் தாய் அளித்த புகாரின் அடிப்படையில் கடத்திச் சென்ற கும்பலை போலீசார் வலை வீசி தேடினர். இதனையறிந்த கொள்ளையர்கள் உடனடியாக பள்ளி மாணவன் மற்றும் ஆட்டோ ஓட்டுநரை மதுரை நாகமலை புதுக்கோட்டை நான்கு வழிச்சாலையில் இறக்கிவிட்டு தப்பிச் சென்றனர். ஆட்டோ ஓட்டுநர் மற்றும் சிறுவனை மீட்ட போலீசார், கடத்தல் சம்பவத்தில் ஈடுபட்ட கும்பலை தீவிரமாக தேடி வருகின்றனர்.
