பாஜக மத்திய சென்னை மாவட்ட வழக்கறிஞர் பிரிவு செயலாளராக மீனாட்சி என்பவர் உள்ளார். இவர் சென்னை வில்லிவாக்கத்தில் குழந்தைகளுக்கென தனியாக ஒரு மழலையர் பள்ளியை நடத்தி வருகிறார். இதனிடையே, பள்ளியில் ராஜாஜி நகரை சேர்ந்த சரண்யா என்பவரின் குழந்தையின் கை, கால்களை கட்டிப் போட்டு அடிப்பதும், துன்புறுத்துவதும், தேவை இல்லாமல் சிறுவனை சீண்டுவதுமாக இருந்துள்ளார்.
கடந்த 7 மாதங்களாக மழலையர் பள்ளியில் சிறுவன் படித்து வரும் நிலையில் தொடர்ந்து துன்புறுத்தப்பட்டுள்ளான். இதனை கண்ட சக ஊழியர்கள் சிறுவனின் பெற்றோருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இதையடுத்து தனது குழந்தை துன்புறுத்தப்பட்டது குறித்து மழலையர் பள்ளி உரிமையாளர் மீனாட்சியிடம் கேட்ட பெற்றோருக்கு மிரட்டல் விடுக்கப்பட்டதாக தெரிகிறது. தொடர்ந்து, வில்லிவாக்கம் காவல் நிலையத்தில் சிறுவனின் தாய் சரண்யா புகார் அளித்தார்.
இப்புகாரின் பேரில் பள்ளிக்கு சென்று விசாரணை செய்ததில் மீனாட்சி சிறுவனை கொடுமைப்படுத்தியது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, மழலையர் பள்ளியின் உரிமையாளரும் பாஜக மத்திய சென்னை மாவட்ட வழக்கறிஞர் பிரிவு செயலாளருமான மீனாட்சி கைது செய்யப்பட்டார். மீனாட்சி ஆபாசமாக பேசுதல், கொலை மிரட்டல் உட்பட 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து போலீசார் சிறையில் அடைத்தனர்.