கர்நாடக அரசு காவிரியில் ஆண்டுதோறும், தமிழகத்திற்கு 177.25 டிஎம்சி தண்ணீர் விடவேண்டும். இதை ஒவ்வொரு மாதமும் பங்கிட்டு வழங்கும்படி உச்சநீதிமன்றம் தீர்ப்பில் கூறியுள்ளது. ஆனால் கர்நாடக அரசு இந்த ஆண்டு குறிப்பிட்ட அளவு தண்ணீர் வழங்காததால் தமிழகத்தின் டெல்டா மாவட்டங்களில் குறுவை பயிர் பாதிக்கப்பட்டது.
தமிழகத்திற்கு உரிய தண்ணீரை திறந்து விட நடவடிக்கை எடுக்கும்படி தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் 2 முறை டில்லி சென்று மத்திய அமைச்சரை சந்தித்தார். காவிரி மேலாண்மை கூட்டத்திலும் தமிழக அரசு முறையிட்டது. தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினும், பிரதமருக்கு இது குறித்து கடிதம் எழுதினார்.
ஆனாலும் கர்நாடக அரசு கண்டுகொள்ளவில்லை. எனவே தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. நீதிபதி கவாய் தலைமையில் பிஎஸ் நரசிம்மா, பி.கே. மிஸ்ரா ஆகியோரை கொண்ட அமர்வு விசாரணை நடத்தியது. தமிழகத்தின் சார்பில் மூத்த வழக்கறிஞர் முகுல் ரோத்தகி ஆஜராகி வாதங்களை எடுத்து வைத்தார்.
கர்நாடக அரசு தமிழகத்திற்கு இந்த பருவத்தில் எவ்வளவு தண்ணீர் வழங்கி உள்ளது என்பதை பிரமாணபத்திரமாக தாக்கல் செய்யும்படி காவிரி மேலாண்மை ஆணையத்துக்கு உத்தரவிட்ட உச்சநீதிமன்றம் வழக்கை வரும் செப்டம்பர் 1ம் தேதிக்கு தள்ளிவைத்தது.