தேர்தல் பத்திரங்கள் குறித்த விவரங்களை வெளியிடுவதற்கு உச்ச நீதிமன்றம் வழங்கிய காலக்கெடு நிறைவடைந்த நிலையில், பாரத ஸ்டேட் வங்கி (எஸ்பிஐ) மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை கோரி மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. உச்ச நீதிமன்றத்தில் இது குறித்த மனுவை ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான சங்கம் (ADR) அமைப்பு தாக்கல் செய்துள்ளது.
கடந்த 2019, ஏப்.12-ம் தேதி முதல் வாங்கப்பட்ட தேர்தல் பத்திரங்கள் தொடர்பான விவரங்களை மார்ச் 6-ம் தேதிக்குள் தேர்தல் ஆணையத்திடம் ஒப்படைக்கும்படி எஸ்பிஐ வங்கிக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இதனை எஸ்பிஐ வங்கி நிறைவேற்றாத நிலையில்தான் ஏடிஆர் அமைப்பு நீதிமன்ற அவமதிப்பு வழக்கு கோரி மனு தாக்கல் செய்துள்ளது. கடந்த 2018-ம் ஆண்டு மத்திய அரசு கொண்டு வந்த தேர்தல் பத்திரம் திட்டத்துக்கு எதிரான வழக்கின் முதன்மை மனுதாரரான ஏடிஆர் அமைப்பு, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் முன்பு இந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கு மனுவை தாக்கல் செய்தது.
இதற்கு, தேர்தல் பத்திரங்கள் தொடர்பான வழக்குகளுக்கு தலைமை தாங்கும் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி, “இந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கு மனு முறையாக சரிபார்க்கப்பட்டு பட்டியலிடப்பட்டால், எஸ்பிஐ வங்கியின் கூடுதல் அவகாசம் கோரிய வழக்குடன் சேர்த்து விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும்” என்று பதில் அளித்தார். அப்போது, நீதிமன்ற நடைமுறைகள் பின்பற்றப்படும் என்று பிரசாந்த் பூஷண் உறுதி அளித்தார்.
முன்னதாக, ‘தகவல்களைத் தரவிறக்கம் செய்து, நன்கொடையாளர்கள் வழங்கிய நன்கொடைகளுடன் பொருத்துவது சிக்கலானதொரு நடவடிக்கை. எனவே முழு தகவல்களை வெளியிடுவதற்கு ஜூன் 30ம் தேதி வரை கால அவகாசம் வேண்டும்’ எனக் கோரி, உச்ச நீதிமன்றத்தில் மார்ச் 4-ம் தேதி எஸ்பிஐ வங்கி மனு தாக்கல் செய்திருந்தது.
எஸ்பிஐ வங்கி தனது மனுவில், “22,217 தேர்தல் பத்திரங்கள் குறித்த தரவுகளை பதிவிறக்கம் செய்ய வேண்டும். இது தரவுகளை பதிவிறக்குதல், அதனை தொகுத்தல் மற்றும் 44,434 (வங்கி வழங்கிய தேர்தல் பத்திரங்களின் இரு மடங்கு) பத்திரங்களுடன் ஒப்பிட்டு பொருத்திப் பார்த்தல் போன்ற நடவடிக்கைகளை உள்ளடக்கியது. நன்கொடை வழங்கியவர்கள் மற்றும் நன்கொடை பெற்றவர்களின் தகவல்கள் தனித்தனி போர்ட்டலில் வைக்கப்பட்டுள்ளன. பொதுவான தகவல்கள் பராமரிக்கப்படவில்லை. பாதுகாப்பு மற்றும் நன்கொடையாளர்கள் குறித்த ரகசிய காரணங்களுக்காக இவ்வாறு செய்யப்பட்டது” என்று தெரிவித்துள்ளது.
இதனிடையே, எஸ்பிஐ வங்கியின் செயலை காங்கிரஸ் கட்சி கடுமையாக சாடியுள்ளது. “மோடி அரசு, தேர்தல் பத்திரங்கள் மூலமாக செய்த தங்களின் சந்தேகத்துக்குரிய பரிவர்த்தனைகளை மறைப்பதற்காக நாட்டின் மிகப் பெரிய வங்கியை பயன்படுத்துகிறது” என்று காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே குற்றம்சாட்டியிருந்தார்.
முன்னதாக, கடந்த மாதம் தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு தேர்தல் பத்திரம் திட்டத்தினை ரத்து செய்து உத்தரவிட்டது. இது குறித்த வழக்கை விசாரித்த அமர்வு, ‘தேர்தல் நடைமுறைகள் அனைத்தும் வெளிப்படையாக இருக்கும் நிலையில், தேர்தல் நிதி தொடர்பான தகவல்களும் வெளிப்படையாக இருப்பது அவசியம். இதனை வெளிப்படையாக தர மறுப்பது அரசியல் சட்டப் பிரிவு 19(1)(ஏ)-இன் கீழ் தகவல் பெறும் உரிமைக்கு எதிரானது. எனவே, தேர்தல் பத்திரம் திட்டம் சட்டவிரோதமானது’ என்று தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.