பெண் போலீசாரை அவதூறாக பேசியதாக சவுக்கு சங்கர் மீதும், அவரது பேட்டியை ஔிபரப்பிய பெலிக்ஸ் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்து அவர்களை கைது செய்தனர். சவுக்கு சங்கர் கோவை மத்திய சிறையிலும், பெலிக்ஸ் திருச்சி மத்திய சிறையிலும் அடைக்கப்பட்டுள்ளனர். இதில் சவுக்கு மீது குண்டர் சட்டமும் பாய்ந்துள்ளது.
இந்த நிலையில் இவர்கள் இருவர் மீதும் கோவை போலீசார் மேலும் ஒரு வழக்குப்பதிவு செய்துள்ளனர்.பெலிக்ஸின் யூடியூப் சேனலில் முத்துராமலிங்க தேவர் பற்றி சவுக்கு சங்கர் அவதூறு கருத்து தெரிவித்ததாக வழக்கறிஞர் முத்து என்பவர் அளித்த புகாரில் கோவை மாநகர பந்தய சாலை காவல் நிலையத்தில் சவுக்கு சங்கர் பெலிக்ஸ் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.
இரு பிரிவினர் இடையே கலவரத்தை தூண்டும் வகையில் பேசுதல் உள்ளிட்ட பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. சவுக்கு சங்கர் மீது ஏற்கனவே பல்வேறு காவல் நிலையங்களில் 7 வழக்குகள் பதியப்பட்டுள்ள நிலையில் மேலும் ஒரு புதிய வழக்கு பதியப்பட்டுள்ளது.
திருச்சி மாநகர சைபர் கிரைம் போலீசார் ஏற்கனவே சவுக்கு மீது பதிவு செய்த வழக்கிற்காக இன்று சவுக்கு சங்கர் திருச்சி செசன்ஸ் கோர்ட்டுக்கு அழைத்து அழைத்து வரப்பட்டார். கோவையில் இருந்து அவரை பெண் போலீசாரே வேனில் அழைத்து வந்தனர். பெண் போலீசாரை பற்றி அவதூறாக பேசிய சவுக்கு சங்கரை பெண் போலீசாரே அழைத்து வந்தது குறிப்பிடத்தக்கது.
திருச்சி கோர்ட்டிலும் ஏராளமான பெண் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர். திருச்சி கோா்ட்டில் சவுக்கு சங்கருக்கு காவல் தேதி அறிவிக்கப்பட்ட பின்னர் அவரை மீண்டும் கோவை சிறைக்கே கொண்டு செல்வார்கள்.
ஏற்கனவே சவுக்கு சங்கருக்கு குண்டாஸ் போடப்பட்டுள்ளது. அந்த பேட்டியை ஒளிபரப்பிய பெலிக்ஸ்சும் தற்போது கைது செய்யப்பட்டு திருச்சி மத்திய சிறையில் உள்ளதால் அவர் மீதும் குண்டாஸ் போடப்படும் என்று கூறப்படுகிறது.
தற்போது ஒரு பெண் இன்ஸ்பெக்டர் உள்பட 16 பெண் போலீசார், சவுக்கு, பெலிக்ஸ் மீது மகளிர் ஆணையத்தில் புகார் மனு கொடுத்து உள்ளனர். ஒரு சமூக ஆர்வலரும் புகார் மனு கொடுத்துள்ளார். 5 நாளில் 17 புகார் மனுக்கள் கொடுக்கப்பட்டுள்ளது. இன்னும் பலர் புகார் கொடுப்பார்கள் என தெரிகிறது. எனவே சவுக்கு, பெலிக்ஸ் மீது அடுத்தடுத்து மேலும் பல வழக்குகள் சங்கிலி தொடர்போல அணிவகுக்கும் என்று தெரிகிறது.