தேனி பூதிப்புரம் சாலையில் உள்ள தனியார் விடுதியில் கடந்த மே 4-ம் தேதி சவுக்கு சங்கர் தங்கியிருந்தார். அப்போது கோயம்புத்தூர் போலீசார் அந்த விடுதியில் அதிரடி சோதனை நடத்தி அவரை கைது செய்தனர்.அவரது கார் மற்றும் விடுதி அறையை சோதனை செய்த போது கஞ்சா இருப்பது தெரிய வந்தது. இதனைத் தொடர்ந்து பழனிசெட்டிபட்டி போலீசார் சவுக்கு சங்கர் மற்றும் அவருடன் இருந்த இருவரையும் கைது செய்து வழக்குப் பதிவு செய்தனர். இதுகுறித்த வழக்கு மதுரை சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், தேனி மாவட்ட எஸ்பி சிவபிரசாத் பரிந்துரையின் பேரில் கலெக்டர் ஆர்.வி.ஷஜீவனா சங்கர் மீது குண்டர் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்ய உத்தரவிட்டார். இதனைத் தொடர்ந்து சவுக்கு சங்கர் மீது குண்டர் சட்டத்தில் நேற்று வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
ஏற்கெனவே கிளாம்பாக்கம் பஸ்ஸ்டாண்ட் திறப்பு குறித்து பொதுமக்கள் மத்தியில் வதந்தி பரப்பி பொதுமக்களை போராடிய தூண்டியதாக சவுக்கு சங்கர் மீது குண்டர் தடுப்புச் சட்டம் பதிவு செய்யப்பட்டதை உயர்நீதிமன்றம் ரத்து செய்தது. இந்நிலையில், சவுக்கு சங்கர் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் தேனி மாவட்ட போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.