நீதித்துறையை விமர்சனம் செய்ததாக, தானாக முன்வந்து பதிவு செய்த கோர்ட்டு அவமதிப்பு வழக்கில் பிரபல யூடியூபர் சவுக்கு சங்கருக்கு 6 மாதம் சிறை தண்டனை விதித்து உயர் நீதிமன்ற மதுரை கிளை கடந்த செப்டம்பர் மாதம் 15-ந் தேதி உத்தரவிட்டது. இதைடுத்து அவர் சிறையில் அடைக்கப்பட்டார். பின்னர் நீதிமன்ற உத்தரவுக்கு இடைக்கால தடை விதிக்கவும், ரத்து செய்யக்கோரியும் சவுக்கு சங்கர் சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த மனுவை நீதிபதிகள், சவுக்கு சங்கருக்கு விதிக்கப்பட்ட சிறை தண்டனைக்கு இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டது எனவும், சிறையில் இருந்து வெளியே வந்தபின் அடுத்த விசாரணை வரை சவுக்கு சங்கர் எவ்வித கருத்துகளையும் தெரிவிக்கக் கூடாது என்றும் உத்தரவிட்டனர்.
இதையடுத்து சவுக்கு சங்கர் விடுதலையாவார் என்று கருதப்பட்ட நிலையில், சென்னை மத்திய குற்றப்பிரிவு, சைபர் பிரிவு காவல்துறை கடந்த 2020 மற்றும் 2021-ம் ஆண்டுகளில் பதிவு செய்யப்பட்ட 4 வழக்குகளில் சவுக்கு சங்கரை மீண்டும் கடந்த 11-ஆம் கைது செய்தது. இதனை தொடர்ந்து கைது செய்யப்பட்ட 4 வழக்குகளில் இருந்தும் சவுக்கு சங்கருக்கு சென்னை எழுப்பூர் கோர்ட்டு ஜாமீன் வழங்கியது. மேலும் வழக்கு குறித்து வெளியில் எங்கும் பேசக்கூடாது என நிபந்தனை வழங்கியும் உத்தரவிட்டதை அடுத்து கடலூர் மத்திய சிறையில் இருந்து சவுக்கு சங்கர் கடந்த மாதம் 19ந்தேதி விடுவிக்கப்பட்டார். இந்த நிலையில், சவுக்கு சங்கருக்கு விதிக்கப்பட்ட நிபந்தனைகளை தளர்வு செய்து ஐகோர்ட்டு மதுரை கிளை உத்தரவிட்டு உள்ளது.