ஒரே நாடு ஒரே தேர்தல் நடைமுறைப்படுத்தக் கூடாது என வலியுறுத்தியும், மக்கள் தொகை அடிப்படையில் நாடாளுமன்ற தொகுதிகளில் மறுவரையறை செய்யும் நடவடிக்கை கைவிடக் கோரியும் சட்டப்பேரவையில் இரண்டு தனி தீர்மானங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தாக்கல் செய்தார்.
அப்போது பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின் ” ஒரே நாடு ஒரே தேர்தல் தொகுதி மறுவரையறை இரண்டுமே ஜனநாயகம், கூட்டாட்சி முறைக்கு எதிரானது. தொகுதி மறுவரையறை என்பது தென்னிந்திய மாநிலங்களின் தலைக்கு மேல் தொங்கும் கத்தியாக உள்ளது.
மாநில அரசுகள் பல்வேறு பிரச்சனைகளால் கவிழும்போது மத்திய ஆட்சியாளர்கள் முன்வந்து பதவி விலகுவார்களா..? அனைத்து மாநிலங்களும் ஆட்சி அமைந்த பின்பு மத்திய அரசு கவிழுமானால் அனைத்து மாநில ஆட்சிகளும் கலைக்கப்படுமா..? ஒரே நாடு ஒரே தேர்தல் கொள்கையை விட காமெடியான கொள்கை இருக்க முடியுமா..? ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டம் மக்களாட்சி தத்துவத்திற்கு எதிரானது நடைமுறைக்கு சாத்தியம் இல்லாதது என தெரிவித்தார்.
மேலும், தொடர்ந்து பேசிய அவர் ஒரே நாடு ஒரே தேர்தல் என்பது இந்திய அரசியலமைப்பு சட்டத்தில் வகுக்கப்படாத ஒன்று, நாடு முழுவதும் நாடாளுமன்ற தேர்தலில் கூட ஒரே நேரத்தில் நடத்த முடியாத சூழல் தான் உள்ளது. இந்த சூழ்நிலையில் நாடாளுமன்ற தேர்தலுடன் சட்டமன்றங்களுக்கும் தேர்தல் நடத்துவது என்பது இயலாத ஒன்று, நாடாளுமன்றம் சட்டமன்றங்களோடு உள்ளாட்சிகளுக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்த முடியுமா..? மத்திய அரசு மேற்கொள்ள உள்ள தொகுதி மறுவரையறையால் தமிழ்நாட்டில் உள்ள நாடாளுமன்ற, சட்டமன்ற தொகுதியில் எண்ணிக்கை குறையும்.
தற்போது தமிழ்நாட்டின் உரிமைக்காக மத்திய அரசிடம் கெஞ்சும் நிலையில் உள்ளோம். தொகுதி குறைத்தால் நிலைமை இன்னும் மோசம் ஆகும். தொகுதியின் மறுவரையறை என்ற பெயரில் தொகுதிகளின் எண்ணிக்கையை எந்த சூழ்நிலையிலும் குறைக்ககூடாது. மக்கள் தொகை குறைத்துவிட்டதை காரணம் காட்டி தமிழ்நாடு உள்ளிட்ட தென் மாநிலங்களில் மத்திய அரசு பலவீனப்படுத்த பார்க்கிறது என தெரிவித்தார்.