மாநில சமரச தீர்வு மையத்தின் அறிவுறுத்தலின் படி, கோவை மாவட்ட சமரச தீர்வு மையம் மற்றும் கோவை மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில் தேசிய சமரச தீர்வு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது.
இதன் ஒரு பகுதியாக இன்று காலை கோவை மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் சமரச விழிப்புணர்வு பலகை திறப்பு நிகழ்ச்சி மற்றும் சமரச விழிப்புணர்வு குறித்த வாகன பிரசார நிகழ்ச்சியை மாவட்ட முதன்மை நீதிபதி ராஜசேகர் துவக்கி வைத்தார். பின்னர் சமரச விழிப்புணர்வு நோட்டீஸ் வழங்கப்பட்டது. இது குறித்து வழக்கறிஞர் ஒருவர் கூறுகையில், ”அனைத்து மாவட்ட நீதிமன்றங்களிலும்
சமரச மையங்கள் செயல்படுகின்றன. நிலுவையில் உள்ள வழக்குகளை நேரடியாகவோ அல்லது வழக்கறிஞர் மூலமாகவோ சமரச மையத்திற்கு அனுப்பலாம். சமரசம் ஏற்படவில்லை என்றால் வழக்கு நீதிமன்றத்தில் தொடரலாம். சமரச மையத்தில் காணப்படும் தீர்வை இறுதியானது. இதற்கு மேல் முறையீடு கிடையாது”. என்றார். இந்நிகழ்வில், மாவட்ட நீதிபதிகள் மற்றும் வழக்கறிஞர்கள் திரளாக கலந்து கொண்டனர்.