விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே மேற்குத் தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள சதுரகிரி மலையில் சுந்தர மகாலிங்கம் மற்றும் சந்தன மகாலிங்கம் சுவாமி திருக்கோயில்கள் அமைந்துள்ளன. பிரதோஷம், அமாவாசை மற்றும் பௌர்ணமி தினங்களையொட்டிய 4 நாள்கள் மட்டுமே சதுரகிரி மலைக்குச் செல்ல பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டு வருகிறது. இங்கு, ஆடி அமாவாசை, தை அமாவாசைகளில் பக்தர்கள் கூட்டம் அதிகமாகக் காணப்படும் இந்நிலையில், தை அமாவாசையை முன்னிட்டு கடந்த 19ம் தேதி முதல் சதுரகிரி மலைக்குச் செல்ல பக்தர்களுக்கு வனத்துறை அனுமதியளித்தது. தை அமாவாசை தினமான இன்று சதுரகிரி மலையில் உள்ள சுந்தரலிங்கம் சுவாமிக்கும், சந்தன மகாலிங்கம் சுவாமிக்கும் பால், தயிர், சந்தனம், மஞ்சள், திரவியப்பொடி, இளநீர், பன்னீர் உள்ளிட்ட 16 வகையான அபிஷேகங்களும் அதைத்தொடர்ந்து சிறப்பு ஆராதணைகளும் நடைபெற்றன. இன்று விடுமுறை தினம் என்பதாலும் தை அமாவாசை தினம் என்பதாலும் பக்தர்கள் கூட்டம் அதிகமாகக் காணப்பட்டது. மதுரை, விருதுநகர், அருப்புக்கோட்டை, காரியாபட்டி, சிவகாசி, ஸ்ரீவில்லிபுத்தூர், ராஜபாளையத்திலிருந்தும் தென்காசியிலிருந்தும் 30க்கும் மேற்பட்ட சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. உள்ளூர் மட்டுமின்றி வெளியூர் மற்றும் வெளி மாவட்டங்களிருந்தும் இன்று அதிகாலை முதலே அடிவாரப் பகுதியான தாணிப்பாறையில் ஏராளமான பக்தர்கள் குவிந்தனர். இன்று பிற்பகல் வரை பக்தர்கள் மலையேர அனுமதிக்கப்பட்டனர். இன்று ஒரே நாளில் சுமார் 15 ஆயிரம் பக்தர்கள் மலையேறி சுவாமி தரிசனம் செய்தனர். மேலும், மலைப்பாதையில் உள்ள நீரோடைகளில் குளிக்கவும், இரவில் சதுரகிரி மலையில் தங்கவும் பக்தர்களுக்கு தடைவிதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. அதோடு, இன்று காலை சதுரகிரி மலையேறிய கோவை கே.கே.புதூர் சாய்பாபா நகரைச் சேர்ந்த சிவக்குமார் (48) என்ற பக்தர் சதுரகிரி மலையில் இரட்டை லிங்கம் அருகே உள்ள வனதுர்க்கை அம்மன் கோயில் அருகே சென்றபோது மூச்சுத் திணறல் ஏற்பட்டு திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்தார். அப்பகுதியிலிருந்த வனத்துறையினர் சடலத்தை அடிவாரப் பகுதிக்கு கொண்டுவந்தனர். பின்னர், ஆம்புலென்ஸ் மூலம் உசிலம்பட்டி ஜிஎச்சிற்கு பிரேத பரிசோதனைக்காக சிவக்குமார் சடலம் கொண்டுசெல்லப்பட்டது. இதுகுறித்து, சாப்டூர் போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்…