மறைந்த முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆரின் 106-வது பிறந்த நாளை முன்னிட்டு, சென்னை தி.நகரில் உள்ள தனது இல்லத்தில், எம்.ஜி.ஆரின் திருவுருவப் படத்திற்கு வி.கே.சசிகலா மலர்தூவி மரியாதை செலுத்தினார்.
இதனைத் தொடர்ந்து நிருபர்களிடம் பேசிய அவர், “மறைந்த முதல்வர் ஜெயலலிதா இருந்தபோதே ஆளுநர் உரை தயாரிக்கப்பட்டவுடன் ஆளுநர் மாளிகைக்கு அனுப்பப்படும். அதன் பின்னர் அதில் திருத்தம் இருந்தால், அவர்களே செய்து அனுப்புவார்கள். இதனைத் தொடர்ந்து இரண்டாவது முறையும் அனுப்ப வேண்டும். அதைப் பார்த்த பிறகு தான் புத்தகமாக அச்சிடப்படும். ஆனால், திமுக அரசு எத்தனை முறை அனுப்பினார்கள் என்று தெரியவில்லை. ஆகவே, இதுகுறித்து கருத்து சொல்வதற்கு ஏதுமில்லை.
ஆளுநரை எப்படி நடத்த வேண்டும் என்ற அணுகுமுறை உள்ளது. அதைப்போல தமிழக அளுநரை, தமிழக அரசு நடத்த வேண்டும். ஒருவருக்கொருவர் ஒருவர் சண்டை போட்டுக் கொள்ளாமல், ஓட்டு போட்ட மக்களுக்கு என்ன செய்ய முடியும் என்று யோசிக்க வேண்டும்.
ஜெயலலிதா சொல்வதை மட்டுமே செய்வார். மக்களை ஒருபோதும் அதிமுக ஏமாற்றியது இல்லை. வரும் காலங்களில் நன்றாக யோசித்து திமுக அரசு செயல்பட வேண்டும்.
வரும் நாடாளுமன்றத் தேர்தலில் ஒன்றிணைந்து, திமுகவை வீழ்த்தி, அதை எம்ஜிஆரிடம் சமர்ப்பிப்போம். அனைவரும் ஒன்றிணைந்து திமுகவை வீழ்த்த வேண்டும். எங்கள் கட்சிக்காரரை சந்திப்பதற்கு, எனக்கு என்ன பயம்? விரைவில் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிசாமியை சந்திக்கும் திட்டம் உள்ளது” என்று அவர் கூறினார்.