நடிகரும், சமத்துவ மக்கள் கட்சித் தலைவருமான சரத்குமார் சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே உள்ள அவரது குலதெய்வமான ஸ்ரீ காமாட்சி அம்மன் கோயில் கும்பாபிஷேகத்தில் கலந்து கொள்வதற்காக சென்றார். அவருடன் மனைவி ராதிகா, மகள் வரலட்சுமி என குடும்ப உறுப்பினர்களும் இருந்தனர். இந்த கோயில் மட்டுமல்லாது, அப்பகுதியில் உள்ள மேலும் சில கோயில்களுக்கும் சரத்குமார் சுவாமி தரிசனம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதற்காக கேரவன் அங்கு வரவழைக்கப்பட்டிருந்தது. சரத்குமார் உள்ளிட்டோர் கோயிலுக்கு வந்த பின்னர், அவர்கள் பயணம் செய்த கேரவன் திண்டுக்கல்லுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அப்போது, திருப்பத்தூர் அருகே கேரவன் சென்று கொண்டிருந்த போது, எதிரே வந்த பஸ் மீது மோதி விபத்திற்குள்ளானது. இதில் பஸ்சில் வந்த 12 பேர் படுகாயமடைந்தனர். கேரவனில் இருந்த ஒருவருக்கு லேசான காயம் ஏற்பட்டுள்ளது.
உடனடியாக காயமடைந்தவர்கள் திருப்பத்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைகத்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
முன்னதாக, கோயிலில் சுவாமி தரிசனம் முடித்துவிட்டு அப்போட்டோக்களை பகிர்ந்து, ‘என் தந்தை பிறந்த தளக்காவூர் கிராமத்தில் பிரதிஷ்டை செய்திருக்கும் ஸ்ரீ வரசித்தி விநாயகர் திருக்கோயில் மற்றும் சிராவயல் கிராமத்தில் பிரதிஷ்டை செய்திருக்கும் எங்கள் குலதெய்வம் ஸ்ரீ காமாட்சி அம்மன் திருக்கோயிலின் அஷ்டபந்தன மஹாகும்பாபிஷேக நிகழ்வில் குடும்பத்தாரின் அழைப்பை ஏற்று நேற்றும், இன்றும் கலந்து கொண்ட சொந்த பந்தங்களுக்கும், ஆலய பங்காளிகளுக்கும், கிராமத்து பெரியவர்களுக்கும், ஊர் பொதுமக்களுக்கும் நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்’ என சரத்குமார் கூறியுள்ளார்.
இதன் பின் சரத்குமாரிடம் மக்களவைத் தேர்தல் கூட்டணி குறித்து நிருபர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு, “தேர்தலில் போட்டியிடுவது, கூட்டணி அமைப்பது குறித்து வரும் 24-ம் தேதி திருச்சியில் நடைபெறும் கட்சியின் நிர்வாகக் குழு கூட்டத்திற்குப் பின்னர் முடிவு செய்யப்படும். மக்களவைத் தேர்தலில் நான் போட்டியிடுவதா, வேண்டாமா என்பது குறித்தும் அன்றைய தினமே முடிவு எடுக்கப்படும்” என்று பதிலளித்தார்.