முருகனின் 4ம் படைவீடான சுவாமிமலை, சுவாமிநாத சுவாமி கோயிலின் உப கோயிலும், திருஞான சம்பந்தர், திருநாவுக்கரசரால் பாடல் பெற்ற தலம் அய்யம் பேட்டை அடுத்த சக்கராப் பள்ளி அருள்மிகு தேவநாயகி அம்பாள் உடனுறை அருள்மிகு சக்கரவாகேஸ்வர சுவாமி ஆலய சப்தஸ்தான விழா நடந்து வருகிறது.
கடந்த 2 ந் தேதி கொடியேறியது. 3 ந் தேதி மாலை ரிஷப வாகனத்திலும் , 4 ந் தேதி பூத, 5 ந் தேதி சேஷ, 7 ந் தேதி யானை, 8 ந் தேதி கைலாச , 9 ந் தேதி குதிரை உள்ளிட்ட வாகனங்களில் சுவாமி புறப்பாடு நடந்தது. நேற்று முன் தினம் முக்கிய நிகழ்வான சப்தஸ்தான கண்ணாடி பல்லக்கில் சுவாமி, அம்பாள் எழுந்தருள, மதகடி, மாகாளிபுரம், வழுத்தூர், அரிய மங்கை, சூல மங்கலம், நல்லிச் சேரி, கள்ளர் பசுபதி கோயில், தாள மங்கை, வெள்ளாளர் பசுபதி கோயிலை சென்றடைந்து,
இரவு குட முருட்டி ஆற்றில் வாண வேடிக்கை நடந்து, இலுப்பக் கோரையை சென்றடைந்தது. நேற்று வெள்ளாள பசுபதி கோயில், அய்யம் பேட்டையிலுள்ள வீதிகள் வழியாக மெயின் சாலையிலிருந்த அழகு நாச்சியம்மன் கோயில் முன்பாக பொம்மை சுவாமிக்கு பூப் போட்டது. இதன் பின்னர் பல்லக்கு கோயிலை சென்றடைந்தது.