பெண் காவலர்களை அவதூறாக பேசிய வழக்கில் பிரபல யூடியூபர் சவுக்கு சங்கர் கோவை போலீசாரால் கைது செய்யப்பட்டார். பின்னர் திருச்சி பெண் போலீஸ் அதிகாரி அளித்த புகாரில் போலீசார் அவரை கோவையில் இருந்து அழைத்து வந்து திருச்சி கூடுதல் மகளிர் உரிமையியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அங்கு அவரிடம் ஒரு வாரம் கஸ்டடி விசாரணைக்கு அனுமதி கேட்டு போலீசார் மனு தாக்கல் செய்தனர். ஆனால் ஒரு நாள் மட்டும் கஸ்டடி விசாரணைக்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியது.
இதையடுத்து போலீசார் சங்கரை, ராம்ஜிநகர் காவல் நிலையத்துக்கு நேற்று அழைத்து சென்று அவரிடம் விடிய விடிய விசாரணை நடத்தினர். இடையில் 3 முறை சங்கரை அவரது வழக்கறிஞர் சந்தித்தார். இன்றும் சங்கரிடம் விசாரிக்கப்பட்டது. அப்போது அவர் பெண் போலீசார் பற்றி தான் பேசியது தவறுதான் என்று தெரிவித்ததாக தகவல் வெளியாகி உள்ளது.
இதனிடையே கஸ்டடி முடிந்ததையடுத்து சங்கரை மீண்டும் திருச்சி கோர்ட்டில் இன்று ஆஜர்படுத்தினர். அப்போது கோவை சிறை தனக்கு மனரீதியாக பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. எனவே திருச்சி அல்லது சென்னை சிறையில் தன்னை அடைக்க உத்தரவிடுமாறு சங்கர் கோரிக்கை வைத்தார். இந்த கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம், வரும் 28ம் தேதி வரை கோவை சிறையில் இருக்க உத்தரவு இருப்பதால் அங்கேயே அழைத்து செல்லுமாறு உத்தரவிட்டது. இதையடுத்து திருச்சி போலீசார் சங்கரை கோவைக்கு அழைத்து சென்றனர். இதனிடையே திருச்சியில் மருத்துவ மருத்துவபரிசோதனைக்கு அழைத்து சென்ற போது தவறாக பேசியதாக ஒரு பெண் போலீஸ் அளித்த புகாரில் சங்கர் மீது மேலும் ஒரு வழக்கு பதிவு செய்யப்பட்டது.