கடந்த 26-ம் தேதி ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கியுள்ள ‘லால்சலாம்’ படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது. இதில் இயக்குநர் ஐஸ்வர்யா பேசும்போது, ” என் அப்பாவை சங்கி என்று யாராவது சொன்னால் எனக்கு கோபம் வரும். அவர் ஆன்மிகவாதி மட்டுமல்ல, மனிதநேயவாதி. ஒரு சங்கியால் ‘லால்சலாம்’ போன்ற படங்களில் நடிக்க முடியாது” எனக் கூறினார். இந்தப் பேச்சு ரசிகர்கள் மத்தியில் வைரலானது. இதுகுறித்து சென்னை விமான நிலையத்தில் நடிகர் ரஜினிகாந்த் பேட்டி கொடுத்துள்ளார்.
அப்போது, கடப்பா சென்று அங்கிருந்து ஹைதராபாத்திற்கு ’வேட்டையன்’ படப்பிடிப்பிற்குச் செல்வதாக தெரிவித்தார். மேலும், ’லால்சலாம்’ படம் குறித்தும், ஐஸ்வர்யா எனது அப்பா சங்கி அல்ல எனக் கூறியது குறித்தும் அவரிடம் கேட்டதற்கு, “ ’லால்சலாம்’ படம் நன்றாக வந்திருக்கிறது. அப்படம் மதநல்லிணக்கத்தை வெளிப்படுத்தும் படமாக இருக்கும். சங்கி என்பது கெட்ட வார்த்தை என்று யாரும் சொல்லவில்லை. அப்பா ஒரு ஆன்மிகவாதி, அவரை ஏன் அப்படி எல்லாரும் கூறுகிறார்கள் என்றுதான் என் மகள் ஐஸ்வர்யா வேதனைப்பட்டார். அவர் சரியாகவே பேசியுள்ளார்” என்றார் ரஜினிகாந்த்.