நாகை மாவட்டம் நாகூர் ஆண்டவர் தர்காவின் 466ம் ஆண்டு கந்தூரி விழா கொண்டாடப்பட உள்ளது. சுமார் 10 நாட்களுக்கு கொண்டாடப்படும் இந்த விழாவில் ஊராளமான இஸ்லாமியர்கள் கலந்துகொள்வது வழக்கம். இதற்காக வாழை மரங்கள், தோரணங்கள் மற்றும் வண்ண விளக்குகளால் அப்பகுதி முழுவதும் அலங்காரங்கள் சிறப்பாக செய்யப்பட்டுள்ளது. இதற்கிடையில் ஜனவரி 2-ம் தேதி சந்தனக் கூடு ஊர்வலம் நடைபெறும். பின்னர் ஜனவரி-3 ம் தேதி பெரிய ஆண்டவருக்கு சந்தனம் பூசும் திருவிழா நடைபெறுவதால் அன்றைய தினம் ஏராளமான பக்தர்கள் வருகை தருவார்கள். இதனை கருத்தில் கொண்டு ஜனவரி 3-ம் தேதி நாகை மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் அருண் தம்புராஜ் உத்தரவு பிறப்பித்துள்ளார்.