Skip to content
Home » தஞ்சை அருகே…. தாசில்தாரை லாரி ஏற்றி கொல்ல முயற்சி… மணல் கடத்தல் கும்பலுக்கு வலை

தஞ்சை அருகே…. தாசில்தாரை லாரி ஏற்றி கொல்ல முயற்சி… மணல் கடத்தல் கும்பலுக்கு வலை

  • by Authour

தஞ்சை மாவட்டம் சாலியமங்கலம் அருகே ராராமுத்திரை கோட்டை கிராமத்தில் வீட்டுமனைப் பட்டா வழங்க, பாபநாசம்  தாசில்தார் செந்தில்குமார், மண்டல துணை  தாசில்தார் பிரபு, வருவாய் ஆய்வாளர் கமலி, கிராம நிர்வாக அலுவலர் சதீஷ் ஆகியோர் ஸ்தல ஆய்வுப் பணி மேற் கொண்டார்.

பணியை முடித்துவிட்டு கிளம்பும்போது,  ஒரு மணல்  லாரி வேகமாக வந்தது.  அந்த லாரியில் இருந்தவர்கள், தாசில்தார் வாகனத்தை பார்த்ததும், தங்களை பிடிக்கத்தான்  தாசில்தார் வந்திருக்கிறார் என  பயந்து  இன்னும் வேகமாக வந்து, தாசில்தாரின் ஜீப் மீது  மோதுவது போல  வந்தனர்.

ஜீப்‌ ஓட்டுநர் கணேஷ் சாதுர்யமாக  ஜீப்பை  திருப்பினார். இதனால்  ஜீப்பில் இருந்த தாசில்தார் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.   அதன் பிறகும் லாரி வேகமாக சென்றது.   தாசில்தார்  செந்தில்குமார் உத்தரவுபடி,  டிரைவர் கணேஷ் லாரியை துரத்தினார். அப்போது இரண்டு இரு சக்கர வாகனத்தில் வந்த நபர்கள்  தாசில்தாரின் வாகனம் வேகமாக செல்ல முடியாதபடி ரோட்டின் குறுக்கை வந்து தடை செய்து கொண்டிருந்தனர்.

அதையும்  சமாளித்து, சுமார் 10 கிலோ மீட்டர் தூரம்  லாரியை விரட்டிச்சென்று   மடக்கி பிடித்தனர். குளிச்சப்பட்டு என்ற இடத்தில்  லாரியை மடக்கியபோது  டிரைவர் மற்றும் லாரியில் இருந்தவர்கள் கீழே குதித்து தப்பி ஓடிவிட்டனர்.

பின்னர் மணல் லாரியை கைப்பற்றி அம்மாபேட்டை காவல் நிலையத்தில்  தாசில்தார் ஒப்படைத்தார். இதுகுறித்து அம்மாபேட்டை போலீஸார் வழக்கு பதிந்து லாரி உரிமையாளர் யார், லாரியை ஓட்டியவா் யார், யாருக்காக மணல் கடத்தினார்கள் என  விசாரணை நடத்தி வருகிறார்கள்.  அந்த லாரியில் மணல் எடுத்து செல்ல  பெர்மிட் எதுவும் இல்லை. எனவே லாரியில் திருட்டுத்தனமாக மணல் கடத்தி உள்ளனர் என தெரியவந்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *