சாம்சங் நிறுவனம் தமிழகத்தில் மேலும் ஆயிரம் கோடி முதலீடு செய்ய உள்ளதாக தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா தெரிவித்துள்ளார்.
சட்டப்பேரவையில் தொழில்துறை மானியக்கோரிக்கையில் புதிய அறிவிப்புகளை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா வெளியிட்டார். அப்போது பேசிய அவர், நாகையில் 600 பேர் பணியாற்றும் வகையில் புதிய டைடல் பூங்கா அமைக்கப்படும். கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலத்தில் 450 ஏக்கர் பரப்பளவில் புதிய சிப்காட் பூங்கா அமைக்கப்படும். வேலூர் மற்றும் திருப்பத்தூர் மாவட்டங்களில் மேலும் புதிய சிப்காட் பூங்கா அமைக்கப்படும். தென்காசி, சிவகங்கை மாவட்டங்களில் புதிய சிப்காட் பூங்கா மற்றும் திருவாரூர், ராமநாதபுரத்தில் ஜவுளி பூங்கா அமைக்கப்படும்.
தஞ்சை மாவட்டத்தில் கடல்சார் உணவு ஏற்றுமதி பூங்கா அமைக்கப்படும். திருப்பத்தூர் மாவட்டத்தில் பெண்களுக்கு அதிக வேலைவாய்ப்புகளை உருவாக்கும் விதமாக தோல் அல்லாத காலணி உற்பத்தி பூங்கா 125 ஏக்கர் பரப்பளவில் உருவாக்கப்படும். சாம்சங் நிறுவனம் தமிழகத்தில் மேலும் ஆயிரம் கோடி முதலீடு செய்ய உள்ளது. சாம்சங் தொழிலாளர் பிரச்சனையை முதலமைச்சர் ஸ்டாலின் திறம் பட கையாண்டார். இதன் காரணமாக மேலும் ஆயிரம் கோடி ரூபாய் முதலீடு செய்ய சாம்சங் நிறுவனம் முடிவு செய்துள்ளது. இதன் மூலம் மேலும் நூற்றுக்கணக்கானோருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என தெரிவித்துள்ளார்.