சென்னை அடுத்து காஞ்சிபுரம் மாவட்டம் சுங்குவார்சத்திரம் பகுதியில் உள்ள சாம்சங் இந்தியா தொழிலாளர்கள் கடந்த ஒரு மாத காலமாக ஊதிய உயர்வு, தொழிற்சங்க அங்கீகாரம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி எச்சூர் பகுதியில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர் .
நேற்று இரவு சாம்சங் தொழிலாளர் போராட்ட களத்தில் பத்து பேர் இருந்த நிலையில், காவல்துறை அதிரடியாக அவர்களை கைது செய்து அங்கு அமைக்கப்பட்டிருந்த பந்தலை அகற்றி னர்.
இதனால் சாம்சங் தொழிலாளர்கள் இடையே பெரும் பரபரப்பு காணப்பட்டது. மேலும் நேற்று போராட்ட களத்திற்கு samsung தொழிலாளர்கள் வந்த வாகனம் விபத்தில் சிக்கிய நிலையில் அங்கு வந்த காவல்துறை அதிகாரியிடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. ஒரு கட்டத்தில் காவல் அதிகாரி கீழே விழுந்ததால் அது தொடர்பாகவும் சாம்சங் தொழிலாளர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
மேலும் நேற்று இரவு கைது செய்யப்பட்ட நபர்கள் நள்ளிரவு விடுவிக்கப்பட்ட நிலையிலும் தற்போது வரை அவர்களை தொடர்பு கொள்ள இயலாத நிலை உள்ளது.
இந்நிலையில் இன்று காலை 7 மணி அளவில் காஞ்சிபுரம் மாவட்ட ஏடிஎஸ்பி சுரேஷ்குமார் தலைமையில் 200க்கும் மேற்பட்ட காவல்துறையினர் போராட்ட திடலில் குவிக்கப்பட்டுள்ளனர்.
இன்று தொடர் போராட்டம் இந்த இடத்தில் தொடருமா அல்லது வேறு பகுதியில் திடீரென காவல்துறையின் செயலை கண்டித்து சாலை மறியலில் போராட்டம் நடைபெறுமா என்ற பரபரப்பு காணப்படுகிறது. இன்று காலையிலேயே போராட்ட திடலில் 200க்கும் மேற்பட்ட காவல்துறை ஏடிஎஸ்பி சுரேஷ்குமார் தலைமையில் குவிக்கப்பட்டுள்ளனர்.
இதற்கிடையே இன்று போராட்ட களத்திற்கு வந்த சிஐடியு மாநில தலைவர் சவுந்தர்ராஜன் நிருபர்களிடம் கூறியதாவது:
இந்த பிரச்னையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் உடனடியாக தலையிட்டு பிரச்னைகளை தீர்க்க வேண்டும். சங்கம் அமைப்வபது அடிப்படை உரிமை. அதற்கு ஏன் அனுமதி மறுக்கிறீா்கள் சாம்சங் ஊழியர்களை வீடு வீடாக சென்று போலீசார் கைது செய்ததை கண்டிக்கிறோம். சங்கத்தை பதிவு செய்வது மட்டும் எங்கள் பிரச்னை இல்லை. இத்தனை நாட்களாக போராட்டத்திற்கு தடை விதிக்காமல் இப்போது ஏன் கலைந்து போக சொல்கிறார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.
ஆனாலும் தொழிலாளர்கள் கலைந்து செல்ல மறுத்து அங்கு தொடர்ந்து போராடிக்கொண்டு இருக்கிறார்கள். இதனால் அந்த பகுதியில் பதற்றம் ஏற்பட்டுள்ளது.