தன்பாலின ஈர்ப்பாளர்கள் உலகெங்கும் தங்கள் உரிமைகளுக்காகத் தொடர்ந்து போராடி வருகின்றனர். இதற்கு பல்வேறு நாடுகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். எனினும் கடந்த 2018 ம் ஆண்டு தன்பாலின ஈர்ப்பு என்பது குற்றம் இல்லை என்று உச்சநீதிமன்றம் அறிவித்தது. இதன் பின்னர் தன்பாலின திருமணங்களுக்கு சட்டப்பூர்வ அங்கீகாரம் வழங்கக்கோரி உச்சநீதிமன்றத்தில் 21 பேர் வழக்குகள் தொடர்ந்தனர். இந்த வழக்குகளை விசாரிக்க உச்ச நீதிமன்றம் முடிவு செய்தது.
இந்த வழக்கிற்கான விசாரணை கடந்த ஏப்ரல், மே மாதங்களில் நடைபெற்றது. இதில் மத்திய அரசு தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வந்தது. தன்பாலின திருமணம் என்பது இந்திய குடும்ப அமைப்பிற்கு எதிரானது என்று தொடர்ந்து கூறி வருகின்றது. மேலும் திருமணம் என்பது ஒரு ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையே மட்டும் நடைபெறுவது என்று வாதிட்டது. இந்த வழக்கை இந்தியத் தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையிலான 5 பேர் கொண்ட அரசியல் சாசன அமர்வு விசாரணை செய்து வந்தது.
இந்நிலையில் இன்று காலை 10.30 மணிக்கு இந்த வழக்கிற்கான தீர்ப்பு வாசிக்கப்பட்டது. இதில் 5 நீதிபதிகள் 4 மாறுபட்ட தீர்ப்புகளை வழங்கியுள்ளனர். இந்த தீர்ப்புகளில் கூறப்பட்டுள்ளதாவது: சிறப்பு திருமண சட்டத்தில் மாற்றம் செய்ய வேண்டுமா என்பதை நாடாளுமன்றம்தான் முடிவு செய்ய வேண்டும் .
சிறப்பு திருமண சட்டத்தை ரத்து செய்வது, தேசத்தை சுதந்திரத்திற்கு முந்தைய காலத்திற்கு கொண்டு சென்றுவிடும்.மேலும் திருமணம் என்பது நிலையானது, மாறாதது என்று சொல்வது தவறான விஷயம் ஆகும்.
நீதிமன்றத்தால் சட்டத்தை உருவாக்க முடியாது; அதே நேரத்தில் சட்டத்தின் சரத்துகளை கையாள முடியும். தன்பாலின விவகாரத்தில் உச்சநீதிமன்றம் தலையிடக் கூடாது என மத்திய அரசு தனது நிலைப்பாடாக கூறிவருகிறது. 200 ஆண்டுகளுக்கு முன் நமது முன்னோர்களால் ஏற்க முடியாத பல நடைமுறைகள் இன்று ஏற்கக் கூடியதாக இருக்கிறது. மேலும் தன் பாலின உறவு என்பது நகர்ப்புறத்தை சேர்ந்தது என்ற கருத்து ஏற்புடையது அல்ல.
தன் பாலின இணையர்களால் குழந்தைகளை சரியான முறையில் வளர்க்க முடியாது என்பதற்கு ஆதாரப்பூர்வ தரவுகள் இல்லை. இவ்வாறு தீர்ப்புகள் கூறப்பட்டாலும், இந்த தன்பாலின திருமணத்திற்கு அங்கீகாரம் கிடையாது என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.
.