Skip to content
Home » சம்பா – ராபி பருவ பயிர்களுக்கு விவசாயிகள் பயிர் காப்பீடு…பயன்பெற அறிவிப்பு…

சம்பா – ராபி பருவ பயிர்களுக்கு விவசாயிகள் பயிர் காப்பீடு…பயன்பெற அறிவிப்பு…

பிரதம மந்திரி பயிர் காப்பீட்டுத் திட்டத்தின்கீழ் சிறப்பு மற்றும் ராபி பருவ பயிர்களுக்கு விவசாயிகள் பயிர் காப்பீடு செய்து பயன்பெற்றிட மாவட்ட ஆட்சியர் அழைப்பு

வேளாண்மை பயிர்களில் பூச்சிநோய் மற்றும் இயற்கை இடர்பாடுகளால் எதிர்பாராத இழப்பு ஏற்படும் பட்சத்தில் விவசாயிகளுக்கு நிதியுதவி வழங்கவும், நிலையான வருமானம் கிடைக்கச் செய்து, அவர்களை விவசாயத்தில் நிலைப்பெறச் செய்யவும், பிரதம மந்திரி பயிர் காப்பீட்டுத் திட்டம் மத்திய அரசின் புதிய வழிகாட்டுதலின்படி செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதன்படி, நடப்பு 2024-25ஆம் ஆண்டில் ராபி மற்றும் சிறப்பு பருவங்களுக்கு அரியலூர் மாவட்டத்தில் ‘அக்ரிகல்சர் இன்ஸ்சூரன்ஸ் கம்பெனி இந்தியா லிமிடெட்” என்ற நிறுவனத்தின் மூலம் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இத்திட்டத்தின்கீழ் சிறப்பு பருவத்தில், நெல் II பயிருக்கு ஆண்டிமடம், குவாகம், குண்டவெளி, உடையார்பாளையம், தா.பழூர், சுத்தமல்லி, அரியலூர், ஏலாக்குறிச்சி, கீழப்பழூர், R.S மாத்தூர், செந்துறை, நாகமங்கலம், பொன்பரப்பி, ஜெயங்கொண்டம், திருமானூர் ஆகிய 15 பிர்காக்களிலும், பருத்தி II பயிருக்கு அரியலூர், ஏலாக்குறிச்சி, கீழப்பழூர், R.S மாத்தூர், செந்துறை, நாகமங்கலம் மற்றும் சுத்தமல்லி ஆகிய 7 பிர்காக்களிலும், மக்காச்சோளம் II பயிருக்கு அரியலூர், நாகமங்கலம், ஏலாக்குறிச்சி, கீழப்பழுவூர், திருமானூர், R.S மாத்தூர் மற்றும் செந்துறை ஆகிய 7 பிர்காக்களிலும் பயிர் காப்பீடு செய்ய அரசால் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

மேலும் இத்திட்டத்தின்கீழ் ராபி பருவத்தில் உளுந்து பயிருக்கு ஆண்டிமடம், குவாகம், உடையார்பாளையம், பொன்பரப்பி, R.S மாத்தூர், செந்துறை, சுத்தமல்லி, தா.பழூர் மற்றும் திருமானூர் ஆகிய 9 பிர்காக்களிலும், நிலக்கடலை பயிருக்கு ஆண்டிமடம், குவாகம், அரியலூர், நாகமங்கலம், ஜெயங்கொண்டம், குண்டவெளி, உடையார்பாளையம், பொன்பரப்பி, R.S மாத்தூர், செந்துறை, சுத்தமல்லி மற்றும் தா.பழூர் ஆகிய 12 பிர்காக்களிலும் பயிர் காப்பீடு செய்துகொள்ளவும் அரசால் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.


அதன்படி, நடப்பு 2024-25ஆம் ஆண்டு சிறப்பு பருவத்தில் நெல் II மற்றும் மக்காச்சோளம் II பயிருக்கு நவம்பர் 15ஆம் தேதி வரையிலும் மற்றும் பருத்தி II பயிருக்கு அக்டோபர் 31ஆம் தேதி வரையிலும் விவசாயிகள் பயிர் காப்பீடு செய்து கொள்ளலாம். விவசாயிகள் 1 ஏக்கர் நெல் II பயிருக்கு ரூ.573-ம், 1 ஏக்கர் மக்காச்சோளம் II பயிருக்கு ரூ.345-ம் மற்றும் 1 ஏக்கர் பருத்தி II பயிருக்கு ரூ.517.5-ம் பிரீமியத் தொகையாக செலுத்தி தங்களது பயிருக்கு காப்பீடு செய்து கொள்ளலாம். மேலும் ராபி பருவத்தில் உளுந்து பயிருக்கு நவம்பர் 15ஆம் தேதி வரையிலும், நிலக்கடலை பயிருக்கு 2025ஆம் ஆண்டு ஜனவரி 31-ஆம் தேதி வரையிலும் விவசாயிகள் பயிர் காப்பீடு செய்து கொள்ளலாம். விவசாயிகள் 1 ஏக்கர் உளுந்து பயிருக்கு ரூ.231-ம், 1 ஏக்கர் நிலக்கடலை பயிருக்கு ரூ.379.5-ம் பிரீமியத் தொகையாக செலுத்தி தங்களது பயிருக்கு காப்பீடு செய்து கொள்ளலாம்.

விவசாயிகள் பொது சேவை மையத்தில் பதிவு செய்யும் போது முன்மொழிவு விண்ணப்பம், பதிவு விண்ணப்பம், கிராம நிர்வாக அலுவலர் வழங்கும் அடங்கல், வங்கிக் கணக்கு புத்தகத்தின் முதல் பக்க நகல், ஆதார் அட்டை நகல் ஆகியவற்றை இணைத்து பிரீமியத் தொகையை செலுத்தியபின் அதற்கான ரசீதை பெறலாம். தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க சேவை மையங்கள் மற்றும் தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளிலும் காப்பீடு செய்துகொள்ளலாம். தற்போது சம்பா நெற்பயிர் சாகுபடி முழு வீச்சில் நடைபெற்று வரும் வேளையில் விவசாயிகள் அறிவிக்கை செய்யப்பட்ட சம்பா பயிர்களை காப்பீடு செய்வதற்கான கடைசி தேதி வரை காத்திருக்காமல் முன்னதாகவே காப்பீடு செய்திடக் கேட்டுக்கொள்ளப்படுகிறது.

இது தொடர்பான விபரங்களுக்கு, சம்மந்தப்பட்ட வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் அலுவலகத்தை அணுகி பயனடையுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் பொ.இரத்தினசாமி தெரிவித்துள்ளார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!