வேளாண்மை பயிர்களில் பூச்சிநோய் மற்றும் இயற்கை இடர்பாடுகளால் எதிர்பாராத இழப்பு ஏற்படும் பட்சத்தில் விவசாயிகளுக்கு நிதியுதவி வழங்கவும், நிலையான வருமானம் கிடைக்கச் செய்து, அவர்களை விவசாயத்தில் நிலைப்பெறச் செய்யவும், பிரதம மந்திரி பயிர் காப்பீட்டுத் திட்டம் மத்திய அரசின் புதிய வழிகாட்டுதலின்படி செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதன்படி, நடப்பு 2024-25ஆம் ஆண்டில் ராபி மற்றும் சிறப்பு பருவங்களுக்கு அரியலூர் மாவட்டத்தில் ‘அக்ரிகல்சர் இன்ஸ்சூரன்ஸ் கம்பெனி இந்தியா லிமிடெட்” என்ற நிறுவனத்தின் மூலம் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இத்திட்டத்தின்கீழ் சிறப்பு பருவத்தில், நெல் II பயிருக்கு ஆண்டிமடம், குவாகம், குண்டவெளி, உடையார்பாளையம், தா.பழூர், சுத்தமல்லி, அரியலூர், ஏலாக்குறிச்சி, கீழப்பழூர், R.S. மாத்தூர், செந்துறை, நாகமங்கலம், பொன்பரப்பி, ஜெயங்கொண்டம், திருமானூர் ஆகிய 15 பிர்காக்களில் பயிர் காப்பீடு செய்ய அரசால் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, நடப்பு 2024-25ஆம் ஆண்டு சிறப்பு பருவத்தில் நெல் II / சம்பா பயிருக்கு நவம்பர் 30-ஆம் தேதி வரை பயிர் காப்பீடு செய்துகொள்ள அரசால் கால அவகாசம் நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. விவசாயிகள் 1 ஏக்கர் நெல் பயிருக்கு ரூ.573/- மட்டும் பிரிமீயத் தொகையாக செலுத்தி தங்களது பயிருக்கு காப்பீடு செய்து கொள்ளலாம்.
தற்போது சம்பா நெற்பயிர் சாகுபடி முழு வீச்சில் நடைபெற்று வரும் வேளையில் விவசாயிகள் இவ்வாய்ப்பினை பயன்படுத்தி சம்பா / நெல் II பயிருக்கு இதுவரை காப்பீடு செய்யாத விவசாயிகள் பயிர் காப்பீடு செய்துகொள்ள கேட்டுக்கொள்ளப்படுகிறது. விவசாயிகள் பொது சேவை மையத்தில் பதிவு செய்யும் போது முன்மொழிவு விண்ணப்பம், பதிவு விண்ணப்பம், கிராம நிர்வாக அலுவலர் வழங்கும் அடங்கல், வங்கிக் கணக்கு புத்தகத்தின் முதல் பக்க நகல், ஆதார் அட்டை நகல் ஆகியவற்றை இணைத்து பிரிமியத் தொகையை செலுத்தியபின் அதற்கான ரசீதை பெறலாம். தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க சேவை மையங்கள் மற்றும் தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளிலும் காப்பீடு செய்யலாம். இது தொடர்பான விபரங்களுக்கு, வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் அலுவலகத்தை அணுகி பயனடையுமாறு மாவட்ட கலெக்டர் பொ.இரத்தினசாமி கேட்டுக்கொண்டுள்ளார்.