திருச்சி மாவட்டம் சமயபுரம் அருகே சுங்கச்சாவடியில் தமிழ்நாடு அனைத்து வாகன ஓட்டுனர்கள் சங்கப் பேரவை சார்பாக பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மத்திய,மாநில அரசுகளை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நேற்று நடைபெற்றது. இந்த கண்டன ஆர்ப்பாட்டம் மாநில செயலாளர் ஈரோடு செல்வம் தலைமையில் நடைபெற்றது. மாநிலத் தலைவர் அண்ணா சுரேஷ் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் மத்திய அரசு இயற்றியுள்ள புதிய சட்டம் விபத்து ஏற்படுத்தி விட்டு தலைமறைவாகி விட்டால் அவருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை அல்லது 7 லட்சம் அபராதம் என்கிற சட்டம் தற்காலிகமாக நிறுத்தி வைத்து உள்ளார்கள். அதை நிரந்தரமாக தடை செய்ய வேண்டும் என்றும்,
ஓட்டுநர்கள் உரிமம் எடுக்கும் பொழுது அவர்களுக்கு ஐந்து வருடத்திற்கான
இன்சூரன்ஸ் பாலிசி (மருத்துவ காப்பீடு மற்றும் விபத்து காப்பீடு) சேர்த்து வழங்க
வேண்டும் என்றும், மாநில அரசு இயற்றியுள்ள ஆன்லைன் வழக்கு நிரந்தரமாக ரத்து செய்ய வேண்டும் அல்லது ஓட்டுநர்கள் கையெப்பம் இல்லாமல் வண்டி புகைப்படம் எடுத்து வழக்கு பதிவு செய்யக்கூடாது உள்ளிட்ட 17 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்வதற்காக சென்னை, காஞ்சிபுரம், ஈரோடு, திருச்சி, தர்மபுரி, திண்டுக்கல் ,அரியலூர் பெரம்பலூர், காரைக்குடி மற்றும் பல்வேறு பகுதியில் இருந்து ஓட்டுநர்கள் வந்திருந்தனர்.
இதில் ஆர்ப்பாட்டத்தில் மாநிலத் துணைத் தலைவர் திண்டுக்கல் அர்ஜுனன், பொருளாளர் உடையார்பாளையம் கே.கே. பி. ஆர்.. கார்த்திகேயன், ஒருங்கிணைப்பாளர் திருச்சி ஸ்ரீதர்,துணை ஒருங்கிணைப்பாளர் சென்னை வேலு 20க்கும் மேற்பட்ட சங்கங்களும் 200 ஓட்டுநர்களும் கலந்து கொண்டனர்..