திருச்சி மாவட்டம், சமயபுரம் மாரியம்மன் கோவிலில் தை மாத வெள்ளிக்கிழமையை முன்னிட்டு அம்மன் வெள்ளிக் கேடயத்தில் எழுந்தருளி கோயில் உள் பிரகாரங்களில் திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு கட்சி அளித்தார்.
தமிழகத்தில் உள்ள அம்மன் ஸ்தலங்களில் முதன்மையானதும், பிரசித்தி பெற்றதும் சமயபுரம் மாரியம்மன் கோவில் ஆகும். இக்கோயிலுக்கு தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பேருந்து, கார்,வேன் மற்றும் பாதயாத்திரையாக வருகை தந்து அம்மனை தரிசனம் செய்து வருகின்றனர். மேலும் அமாவாசை, பௌர்ணமி மற்றும் விசேஷ தினங்களில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தந்து அம்மனை தரிசனம் செய்து வருகின்றனர். சமயபுரம் மாரியம்மன் கோவிலில் தைப்பூச விழா, பூச்சொரிதல் விழா, சித்திரை தேரோட்டம்,
பஞ்சப்பிரகாரம் உள்ளிட்ட பல்வேறு விழாக்கள் நடைபெறுவது வழக்கம். ஆடி மாதம் அம்மனுக்கு உகந்த மாதம் என்பதால் பெண் பக்தர்கள் ஆடி மாதத்தில் பாதயாத்திரையாக வருகை தந்து பால்குடம், தீர்த்த குடம், அக்னிசட்டி ஏந்துதல் உள்ளிட்ட வேண்டுதல்களை நிறைவேற்றி நேர்த்திக்கடனை செலுத்தி அம்மனை வணங்கி விட்டு செல்வார்கள்.
ஆடி மாதம் அம்மனுக்கு உகந்த மாதம் போல் தை மாதமும் அம்மனுக்கு உகந்த மாதமாகும்.தை மாதத்தில் அம்மனுக்கு தைப்பூசம், அண்ணன் ஸ்ரீரங்கம் ரங்கநாதரிடம் சீர்வரிசை வாங்குதல், கண்ணடி பல்லக்கில் வழிநடை உபயம் கண்டருதல், வடகாவிரியில் தீர்த்தவாரி உள்ளிட்ட பல்வேறு விழாக்கள் நடைபெறும். அதேபோல் தை மாதத்தில் ஒவ்வொரு வெள்ளிக்கிழமை அன்றும் அம்மன் வெள்ளி கேடயத்தில் எழுந்தருளி கோவில் உள்பிரகாரங்களில் திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சி அளிக்கும். இந்நிலையில் தை மாத மூன்றாவது வெள்ளிக்கிழமையை முன்னிட்டு அம்மன் வசந்த மண்டபத்தில் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளினார். தொடர்ந்து அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், பூஜைகள் மற்றும் மகா தீபாதாரனை நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து அம்மன் வெள்ளி கேடயத்தில் எழுந்தருளி கோவில் உள்பிரகாரங்களில் திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சி அளித்தார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர். இந்த விழாவிற்கான ஏற்பாடுகளை கோயில் இணை ஆணையர் கல்யாணி தலைமையில் கோவில் பணியாளர்கள், கோயில் குருக்கள்கள் பக்தர்கள் உள்ளிட்டோர் செய்திருந்தனர்.