திருச்சி மாவட்டம், சமயபுரம் அருள்மிகு மாரியம்மன் கோயில்த தமிழகத்தில் உள்ள அம்மன் ஸ்தலங்களில் மிகவும் பிரசித்திப் பெற்ற ஸ்தலமாகும். இந்த ஸ்தலத்திற்கு திருச்சி மாவட்டம் மட்டுமல்லாது, தமிழகத்தில் உள்ள பல்வேறு மாவட்டங்கள் மற்றும் இந்தியாவில் உள்ள பிற மாநிலங்களிலிருந்து பக்தர்கள் வந்து சென்று தங்களது நேர்த்திக் கடனை நிறைவேற்றி காணிக்கைகளை உண்டியலில் செலுத்தி வருகின்றனர்.
அவ்வாறு பக்தர்கள் உண்டியலில் செலுத்திய காணிக்கைகளை கோயிலின் மண்டபத்தில் கோயில் இணை ஆணையர் கல்யாணி தலைமையில் உதவி ஆணையர்கள் முன்னிலையில் தன்னார்வலர்கள் , கோயில் பணியாளர்கள், இந்தியன் ஓவர்சீஸ் வங்கி பணியாளர்கள் உள்ளிட்டோர் எண்ணினர்.
அப்போது கோயில் உண்டியலில் கடந்த 15 நாட்களில் பக்தர்கள் செலுத்திய காணிக்கைகளை எண்ணியதில் ரூ.1 கோடியே,25 லட்சத்து,50 ஆயிரத்து 687 ரொக்கமும்,3 கிலோ 973 கிராம் தங்கமும், 7 கிலோ 645 கிராம் வெள்ளியும், 407 அயல்நாட்டு நோட்டுகளும்,1780 அயல்நாட்டு நாணயங்களும் கிடைக்கப் பெற்றன எனத் கோயிலின் இணை ஆணையர் கல்யாணி தகவல் தெரிவித்தார்.