சக்தி ஸ்தலங்களில் பிரசித்தி பெற்றதும், முதன்மையானதுமான சமயபுரம் மாரியம்மன் கோவிலில் தினமும் தமிழகம் மட்டுமல்லாது வெளி மாநிலங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தந்து சாமி தரிசனம் செய்து தங்களது நேர்த்திக் கடனை செலுத்தியும், அலகு, தீச்சட்டி ஏந்தியும், உண்டில்களில் காணிக்கை செலுத்தியும் செல்வார்கள்.
ஆடி மாதம் என்றாலே அம்மனுக்கு உகந்த மாதம் என்பதால் ஆடி மாதம் தொடங்கியதில் இருந்து சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு தினமும்
பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
இன்று விடுமுறை தினம் என்பதால் சமயபுரம் மாரியம்மன் தரிசிப்பதற்காக அதிகாலையில் இருந்து வெளி மாவட்டம் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் கோவிலின் பொது தரிசனத் வரிசையை தாண்டி கோவிலின் தேரோடும் வீதி மற்றும் பேருந்து நிலையம் வரை 1 கிலோ மீட்டர் தூரத்திற்கு மேலாக கட்டணம் மற்றும் பொது தரிசனத்தில் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
பல பக்தர்கள் தங்களது நேர்த்திக்கடனாக அக்கினி சட்டி ஏந்தியும், பிறந்த குழந்தைகளை கரும்பு தொட்டிலில் பிறந்த குழந்தையை வைத்து கோவிலை சுற்றி வலம் வந்தும், காணிக்கை உண்டியலில் காணிக்கை செலுத்தியும் செல்கின்றனர். ஆடி மாதத்தில் அம்மனை வேண்டி வழிபட்டால் திருமணம் ஆகாதவர்களுக்கு விரைவில் திருமணம் கைகூடும், குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்கு விரைவில் குழந்தை பாக்கியம் ஏற்படும் உள்ளிட்ட நினைத்த காரியம் நிறைவேறும் என்பதால் சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு அதிகாலையில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தந்து பயபக்தியுடன் அம்மனை தரிசனம் செய்து வருகின்றனர்.
பக்தர்களின் வசதிக்காக சத்திரம் பேருந்து நிலையத்திலிருந்து சமயபுரம் கோவிலுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. மேலும் கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு பாதுகாப்பாக போலீசார் மற்றும் மாரியம்மன் கோவில் ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்.